மடுவில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் சாரதி ஒருவர் கடற்படைக் குழுவினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆரோக்கியம் தவப்பிரகாசம் (வயது-41) என்பவரையே கடற்படைக் குழுவினர் தாக்கியுள்ளனர். முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியில் வைத்து கடற்படை குழுவினரால் இவர் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். பயணிகள் இவரைக் காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாக்கதலுக்குள்ளான சாரதி ஆ.தவப்பிரகாசம் கருத்துத் தெரிவிக்கையில்,
"மடுத்திருத்தலப் பகுதியில் இருந்து நேற்று மாலை 2.15மணியளவில் சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தோம். இதன் போது முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியூடாக வந்து கொண்டிருந்த போது பஸ்ஸுக்குப் பின்புறமாக கடற்படையினரின் டிரக் ரக வாகனம் வந்துகொண்டிருந்தது. டிரக் வண்டி பஸ்ஸை முந்திக்கொண்டு செல்ல வழிவிடப்படாததால், சுமார் 5 கடற்படை வீரர்கள் என்னைத் தாக்கினர்" என்றார்.
இது தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சாரதி தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளாப்படாவிட்டால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக