ஜி.ரி.லிங்கநாதன் உரை- இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் அமைப்பான இலங்கைக் கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனத்தின் 13வது தேசிய காங்கிரஸ் கூட்டம் இன்றுமுற்பகல் 10.30மணியளவில் கொழும்பு, நாரெஹென்பிட்டி, சாலிகா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான டியூ குணசேகர, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் பல இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகள், பத்மநாபா, ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ரி.சிறிதரன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய புளொட் முக்கியஸ்தர் ஜி.ரி.லிங்கநாதன், இலங்கைக் கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனத்தின் 13ம் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்விற்கு புளொட் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. முன்பு புளொட் தலைவர் திரு.உமாமகேஸ்வரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் இடதுசாரி கட்சிகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். எனினும் இந்த நெருக்கமானது இடைப்பட்ட காலங்களில் அரிதாகவே காணப்பட்டது. தற்போதைய நிலையில் அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதன்மூலமே பரஸ்பரம் புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும். இலங்கைக் கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனக் கூட்டத்தின் இன்றைய தீர்மானங்களின்போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை உடனடியாக முன்வைக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தினையும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மற்றும் ஆயுதக் கலாச்சாரத்தை இந்நாட்டில் கொண்டு வந்தது தமிழ் இளைஞர்களே என்ற தப்பான அபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இது உண்மையல்ல, 1971களிலேயே ஆயுதக் கலாச்சாரம் சிங்கள இளைஞர்களால் இந்நாட்டில் கொண்டுவரப்பட்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக