6 டிசம்பர், 2010

அடைமழை: 75,000பேர் பாதிப்பு; வன்னிப் பிரதேசம் நீரில் மூழ்கின

நாடு முழுவதும் அவசர பணிக்கு ரூ.29 மில்லியன்

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துடன் தொடர்பு துண்டிப்பு

படகுகள் மூலம் நிவாரணம் வழங்குவதில் இராணுவம் மும்முரம்



நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக நாடு முழுவதிலும் 75 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 70 ற்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டி ருப்பதுடன், வெள்ளப்பெருக்கால் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

நாடு முழுவதிலுமுள்ள முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 15 முகாம்களும், கிளிநொச்சியில் 19 முகாம்களும் அமைக்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் முகாம்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

நவம்பர் 10ம் திகதியிலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக 29 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, தங்குமிடம், குடிநீர் மற்றும் மருத்துவம் போன்ற உடனடித் தேவைகளுக்கு இந்நிதி ஒதுக்கப்பட்டிருப் பதுடன், அரசாங்க அதிபர்கள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர் மழையால் வடபகுதியின் அனைத்துப் பகுதிகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக அம்பாந் தோட்டை மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சரியான தகவல்களைப் பெறமுடியாதிருப்பதாக அந்தந்த அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னாரிலுள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங் களும் நிரம்பி வழிவதால் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரித் திருப்பதுடன், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் அதிகரித்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாதிக்கப்பட் டவர்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை வழங்க கிராம சேவகர்கள் ஊடாக நடவடிக்கை எடுத்திருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளை தினகரனுக்குத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பலரைப் பாதுகாப்பாகப் பொது இடங்களில் தங்கவைத்திருப்பதுடன், உடனடியா கச் சமைத்த உணவு வழங்கப்பட் டாலும், ஒரு வாரத்துக்கான உலரு ணவுப் பொருள்களை நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுத்துள் ளோம். அனைத்துக் குளங்களும் நிரம்பிவழிவதால் வெள்ளநீர் மேலும் அதிகரித்துள்ளது. குளங் களிலிருந்தும், நீர் தேங்கியிருக்கும் இடங்களிலிருந்தும் நீர்ப்பம்பிகள் மூலம் நீரை வெளியேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனிக்குளம் மற்றும் தண்ணிமுறிப்புக் குளம் ஆகியன முற்றாக நிரம்பி வான்பாய்ந்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தீர்த்தக்கரை கிராமம் முற்றாக நீரில் மூழ்கியிருப்பதால் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை படகுகளில் சென்று மீட்டுள்ளோம்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சில பகுதிகளூடாக தொடர்புகள் பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை சரியாகப் பெறமுடியாதுள்ளது என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக தட்டுவன்கொட்டி கிராமம் ஏனையயபகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளது. இக்கிராமத்தைச் சூழ வெள்ளம் நிரம்பியிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளை, கராய்ச்சி ஆகிய பகுதிகளே கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. பூநகரிப் பிரதேசமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட மக்கள் பொது இடங்களிலும் அருகிலுள்ள அவர்களின் உறவினர் களுடனும் தங்க வைக்கப்பட்டுள் ளனர். தட்டுவன்கொட்டில் கிராம மக்களுக்கு படகுகள் மூலம் நிவார ணங்கள் வழங்கப்படுகின்றன. இதற் குப் பாதுகாப்புத் தரப்பினர் எமக்கு உதவி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ள நீர் அதிகரித்திருப்பதால் யாழ் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப் பட்டுள்ளன. வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, காக்கைதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளும், பொம்மைவெளி, சூரியவெளி, இருபாலை, நாவற்காடு, பொன்னாலை, கரவெட்டி, சங்கானை உட்பட குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 1880 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் 2610 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 1724 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1245 பேரும் வேலணைப் பிரதேசத்தில் 1386 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதுடன், அதற்கான அனைத்து அதிகாரங்களையும் வடமாகாண ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.

வடபகுதி மாத்திரமன்றி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி யிருப்பதுடன், தாழ் நிலங்கள் பல வெள்ளத்தால் நிரம்பியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக