நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை கண்டித்து நேற்று கொழும்பு புறக்கோட்டை மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் என்பவற்றுக்கு முன்பாகவும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு “புலிகளின் சர்வதேச மட்ட சதியை தோற்கடி” “தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்காதே” “தாய்நாட்டை காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரணதண்டனை விதி” “சிங்கள புலிகளை தோற்கடிப்போம்” போன்ற கோஷங்களை எழுப்பினர். இலங்கைக்கு எதிரான பிரித்தானிய அணுகு முறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அலவி தலைமையில் ஆர்ப்பாட்டம்
புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக மேல் மாகாண ஆளுநரும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஒருங்கிணைப்பாளருமான அலவி மெளலானாவின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பொது மக்கள், மதகுருமார், நடைபாதை வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆளுநர் அலவி மெளலானா,
ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக புலிகளுடன் தொடர்புடையவர்கள் மேற்கொண்ட இந்த சதிமுயற்சியின் மூலம் பசுத்தோல் போர்த்திய புலிகளின் முகமூடி கிழிந்துள்ளது.
இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவமதிப்பாகும்.
நாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு கூட்டத்தில் உரையாற்ற முடியாவிட்டால் ஜனநாயகம் எங்கு போய்விட்டது. இந்த சம்பவங்களுக்கு பிரித்தானிய அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும்.
ஜனாதிபதிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமென்றால் அது முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பாதிப்பாகும். உழைக்கும் மக்களின் தலைவரான ஜனாதிபதி எந்த சவாலையும் தைரியமாக முகம் கொடுக்கக் கூடியவர்.
அவருக்காக நாம் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம். சகல மக்களும் தாய்நாட்டை பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராட வேண்டும். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் புலிகளுக்கு உதவுவதினூடாக நாட்டை காட்டிக் கொடுத்துள்ளனர் என்றார்.
பிரித்தானிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை 11.00 மணிக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. அமைச்சர் விமல் வீரவங்க தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குமார், பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற போது பொலிஸார் வீதித் தடைகளையிட்டு அதனை தடுத்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை தகர்த்துக் கொண்டு முன்னேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு எதிரான பிரித்தானிய அணுகுமுறையை கண்டித்தும் உள்நாட்டு வெளிநாட்டு சதிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பெளத்தாலோக்க மாவத்தை மூடப்பட்டிருந்தது. இதனால் அப்பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது.
ஆர்ப்பாட்ட முடிவில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச; பிரிட்டிஷ் அரசு இவ்வாறானதொரு நிகழ்வை திட்டமிட்டே நடத்தியுள்ளது. பிரிட்டிஷ் அரசு இலங்கையில் பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கும் அந்த நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு பண்நெடுங்காலமாக ஆதரவு வழங்கி வந்துள்ள நாடாகும்.
இந்த உலகில் பயங்கரவாதத்தை ஒழித்துக் காட்டியதொரு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவருக்கு பிரிட்டிஷ் நாடு வழங்கிய அகெளரவத்திற்கு அந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்று கொண்டிருக்கும் காலத்தில் கூட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் பல நாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வந்தபோதெல்லாம் இலங்கை அரசு உரிய முறையில் அவர்களுக்கு ராஜ மரியாதை அளித்துள்ளது.
அத்துடன் அவர்களுக்கான இராஜதந்திர முறையைக் கையாண்டுள்ளது. அண்மையில் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகம் சென்றிருந்தார். அந்த நாடு அவருக்கு உரிய மரியாதையையும் அதி உச்ச கெளரவத்தையும் வழங்கி அதி உச்ச பட்டத்தையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் பல பயங்கரவாத இயக்கங்களுக்கு தடைவிதித்துள்ளது. அதில் விடுதலைப் புலிகளும் அடங்கும். ஆனால் புலிக் கொடிகளுடன் பிரிவினைவாதிகளுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இந் நாடுகளின் ஆதரவில்தான் இலங்கையில் கொடிய பயங்கரவாதம் இந்த அளவுக்கு விருத்தி அடைந்திருந்தது.
பிரிட்டிஷ் அரசு இலங்கையை துண்டாடவும், உலகில் பயங்கரவாதத்துக்கும் அவர்களின் செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கும் அடைக்கலம் வழங்கும் நாடாகவே செயல்படுகின்றது.
இவர்களுடன் இலங்கையைக் காட்டிக் கொடுக்கும் சில ஐ.தே.க. கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், ஜயலத் ஜயவர்தன மற்றும் விக்கிரமபாகு ஆகியோரும் இலங்கையில் பிறந்து லண்டனில் வாழும் சில தேச துரோகிகளும் இணைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக