பிரிட்டனுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நேற்று நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் மகிழ்ச்சி நிறைந்த மகத்தான வரவேற்பை அளித்தனர்.
கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த பெருந்திரளான பொதுமக்களும், அமைச்சர்களும், ஆளுனர்களும், பிரதியமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க அதிகாரிகளும் இணைந்து இந்த அமோக வரவேற்பை நேற்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கினர்.
இதேநேரம் சர்வமதத் தலைவர்கள் மத அனுஷ்டானங்களை நடத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசியும் வழங்கினர். பிரிட்டனுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்ட ஜனாதிபதி ஸ்ரீ லங்கன் விமானத்தில் நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அதி விசேட விருந்தினர்கள் வருகை தரும் பகுதியில் குழுமியிருந்த பெருந்திரளான பொதுமக்களும் அமைச்சர்களும், ஆளுனர்களும், பிரதியமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுக்களின் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைந்து இந்த அமோக வரவேற்பை ஜனாதிபதிக்கு அளித்தனர்.
இங்கு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியின் வர்ணப் படங்களையும், தேசியக் கொடிகளையும் ஏந்தி அசைத்தவாறு “ஜனாதிபதிக்கு வெற்றி”, “ஜனாதிபதியே நீடூழி காலம் வாழ்க!” “ஜனாதிபதிக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்” என மகிழ்ச்சி நிறைந்த கோஷங்களை எழுப்பினர். மக்களின் ஆரவாரமான மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மகிழ்ச்சியோடு மக்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்குப் பொன்னாடை போர்த்தியும் கெளரவமும் அளித்தனர்.
ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கும் இந்நிகழ்வில் அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல்ல, ஏ.எச்.எம். பெளஸி, ஆறுமுகன் தொண்டமான், ரிஷாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, மஹிந்த அமரவீர,
ஜகத் புஷ்பகுமார, மேல் மாகாண ஆளுனர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் பிரித்தானிய அரச உயர் மட்டப் பிரதிநிதிகள் போன்றோர் சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான நற்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கு ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விருது வழங்கி கெளரவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக