15 அக்டோபர், 2010

கொழும்பை தூய நகரமாக்குவதில் அரசியல் நோக்கம் கிடையாது ‘குடிசை வாழ் மக்கள் உரிய இடங்களில் குடியேற்றப்படுவர்’


‘கொழும்பு நகரில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய சூழலில் வீட்டு வசதி அளிக்கப்படும். கொழும்பு நகரை தூய்மையான அழகிய நகரமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். கொழும்பிலுள்ள குடிசை வீடுகளை அகற்றுவதில் எதுவித அரசியல் நோக்கமும் கிடையாது’ என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (14) அரசாங்க தகவல் திணைக் களத்தில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள சுமார் 65 ஆயிரம் குடிசை வீடுகளை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களை அரசாங்கம் வெளியேற்றப்போவதாக எதிர்க் கட்சிகள் தவறான பிரசாரம் முன்னெடுக்கின்றன. சுகாதாரமற்ற பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளுடன் கூடிய பொருத்தமான பகுதிகளில் குடியமர்த்தவே திட்டமிட்டுள்ளோம்.

அவர்களை எங்கு குடியேற்றுவது என்பது குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையே தீர்மானிக்கும். இவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது.

ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக கொழும்பு நகரம் மேலும் அழகுபடுத்தப்படும்.

கொழும்பு மாநகர சபையை ஐ. தே. க. நீண்ட காலம் ஆட்சி புரிந்த போதும் குடிசை மக்களின் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கொழும்பு நகரில் ஐ. தே. க. வுக்குள்ள பலத்தை குறைக்க மக்கள் அகற்றப்பட இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஐ. தே. க.வுக்கு எதுவித அதிகாரமும் இன்று இல்லை என்றார்.

வரவு செலவுத் திட்டம்

2011 வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டின் எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் கருத்திற் கொண்டதாக வரவு செலவுத் திட்டம் அமைக்கப்படும். அமைதியான சூழ்நிலையிலே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட உள்ளது என்றார்.

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து கூறிய அவர், இதற்கு முன்னரும் பல இராணுவ வீரர்களுக்கு இராணுவ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. சட்டத்தின் முன் சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி அனைவரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர். இராணுவ நீதிமன்றமும் ஏனைய நீதிமன்றங்கள் போன்றதே’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக