15 அக்டோபர், 2010

அதிசய வாழ்வு பெற்ற சுரங்கத் தொழிலாளர்களுக்கு குவிகிறது பரிசுப் பொருட்கள்
சான்டியாகோ: சிலி நாட்டின் தங்கச் சுரங்கத்தில், கடந்த 10 வாரங்களாக சிக்கித் தவித்த 33 ஊழியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பரிசுப் பொருட்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் உள்ள தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கத்தில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 700 மீட்டர் ஆழத்தில் வேலை பார்த்த 33 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலச்சரிவில் இவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக முதலில் கருதப்பட்டது. 17 நாட்களுக்கு பிறகு, ஊழியர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்கு ஒரு துளை அமைத்து உணவு, தண்ணீர், பிராண வாயு உட்பட அனைத்தும் சப்ளை செய்யப்பட்டது. இதனால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் கடந்த 69 நாட்களாக உயிர் பிழைத்திருந்தனர். பல கோடி ரூபாய் செலவில் அதிநவீன இயந்திரம் கொண்டு வரப்பட்டு, சுரங்கம் துளையிடப்பட்டு, நவீன இயந்திரத்தின் கூண்டு வழியாக ஒவ்வொரு ஊழியர்கள் மேலே கொண்டு வரப்பட்டனர். இந்த கூண்டில் நின்றபடி அதலபாதாளத்தில் இருந்து வரும் போது, அந்த நபருக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தரவும், அதே சமயம் அவரது இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறியவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அதே போல அக்கூண்டு போன்ற கருவி பயணிக்கும் போது அதற்கு சுற்றுச் சுவரான பெரிய இரும்புக்கூண்டில் வழுவழுப்பாக மோதலின்றி பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. மேலும், கடந்த சில நாட்களாக சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவானது அவர்கள் உடல்நிலையை சீராக வைத்திருக்கும் படி அதிக கவனம் செலுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு சிலி அதிபர் செபாஸ்டியன் பைனீரா வந்து, மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனைக்கு சென்று மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையையும் பார்வையிட்டார். தொழிலாளர்களை மீட்க அவர் எடுத்து கொண்ட அக்கறையால் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களை அவரவர் வீடுகளிலும், ஊர்களிலும் கோலாகலமாக வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்ச ரூபாய் அளித்துள்ளார். பிரபல ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சமீபத்தில் தயாரிக்கப்பட்ட "ஐபாட்'களை வழங்கியுள்ளார். கிரீஸ் நாட்டு நிறுவனம் இந்த தொழிலாளர்களை சுற்றுலா தீவுக்கு அழைத்து செல்ல முன்வந்துள்ளது. ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இந்த தொழிலாளர்களை தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்களும், பிரமுகர்களும் மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக