15 அக்டோபர், 2010

விழிப்புலனற்றோருக்கான சுதந்திரத்தை உறுதி செய்வோம்!






வெள்ளைப் பிரம்பு...

சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல...

மனித சமுதாயத்தில் விழிப்புலனற்றவர்களைக் குறிக்கும் குறியீடாகவும் பயன்படுகிறது. விழிப்புலனற்றவர்களையும் அவர்களது சாதனைகளையும் கெளரவிக்கும் வகையிலே உலகளாவிய ரீதியில் வெள்ளைப் பிரம்பு தினம் கொண்டாப்படுகிறது. இன்றைய தினமாகிய ஒக்டோபர் 15 ஆம் நாள் வெள்ளைப் பிரம்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெள்ளைப் பிரம்பானது விழிப்புலனற்றவர்களுக்கான கருவியாக மட்டுமன்றி அவர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் குறியாகவும் மாறிவிட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக, விழிப்புலனற்றவர்களுக்கு ‘பிரம்பு’ துணையாக இருந்திருக்கிறது. ஆனால் முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர்தான் வெள்ளைப் பிரம்பு உலகுக்கு அறிமுகமாயிற்று.

1921 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிக்ஸ் என்ற புகைப்படக் கலைஞர் விபத்தொன்றிலே தமது விழிப்புலனை இழந்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலே அவர் வசித்தமையால் பயணிப்பதில் பெருஞ் சிரமங்களை எதிர்நோக்கினார். தான் வைத்திருந்த கைத்தடிக்கு வெள்ளை வர்ணத்தைப் பூசினார். அது மற்றோரின் பார்வைக்கு நன்றாகத் தெரியும் என ஊகித்தமையாலேயே அவர் அவ்வாறு செய்தார்.

1931 ஆம் ஆண்டு பிரான்சிலே விழிப்புலனற்றோருக்காக தேசிய வெள்ளைப் பிரம்பு இயக்கம் தொடக்கப்பட்டது. அவ்வியக்கத்தின் சார்பிலே விழிப்புலனற்றோருக்கு அடையாளமாக இரு வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன.

அந்நிகழ்வின் பின்னர், முதலாம் உலக மகா யுத்தத்தினால் விழிப்புலன் பாதிக்கப்பட்ட பிரான்சிய மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் ஏறத்தாழ 5000 வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன.

‘விழிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ளைப்பிரம்பொன்றை வழங்கவேண்டும்’ என 1931 ஆம் ஆண்டு பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது வானொலி ஒலிபரப்பிலே தெரிவித்திருந்தது. அப்போதுதான், (விழிப்புலனற்றோரை அடையாளங்காட்டும்)உலகளாவிய ரீதியிலே அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக வெள்ளைப் பிரம்பு மாறும் எனவும் அவ்வொலிபரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1931லேயே சர்வதேச லயன்ஸ் கழகம் விழிப்புலனற்றோருக்கு வெள்ளைப் பிரம்பை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது, விழிப்புலனற்றோர் வெள்ளைப் பிரம்பைக் குறிப்பிட்டளவு சாய்வாகப் பிடித்தபடி நடத்தலானது அவர்களது அடையாளமாகவே மாறியது.

1964 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியினால் ஒக்டோபர் 15 வெள்ளைப் பிரம்பு தினம் என சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அடிப்படையில் வெள்ளைப்பிரம்பு தினம் பற்றி அறிந்தவர்கள் மிகச் சிலரே. இத்தினத்திலே, விழிப்புலனற்றவர்களின் சாதனைகளைப் பாராட்டும் அதேவேளை அவர்களுக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்காக இரக்கப்படுவதனால் பயனேதும் கிடைத்துவிடப்போவதில்லை. ஆதலால் இரக்கப்படுவதைவிடுத்து அவர்களும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை ஒத்த வாழ்வை முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்யவேண்டும்.

விழிப்புலனை இழந்தவர்கள் தமது வாழ்வையே தொலைத்துவிட்டவர்களாக ஒருபோதும் அர்த்தப்பட மாட்டார்கள்.

சங்ககாலத்திலே போற்றப்பட்ட இரட்டைப் புலவர்களுள் ஒருவரிலிருந்து ஹெலன் கெல்லர் தொட்டு பல விழிப்புலனற்றோர் சாதனை படைத்திருக்கிறார்கள்.

கிரேக்க கலாசாரத்தின் அபிவிருத்தியில் ஆதிக்கம் செலுத்தியவராகக் கருதப்படும் கவிஞர் ஹோமரும் விழிப்புலனற்றவர் என்றே கூறப்படுகிறது. இலியட், ஒடிசி என்ற கிரேக்க மகா காவியங்களை அவரே இயற்றினார். இந்தியக் கவிஞரும் இசை வல்லுநருமான சூர்தாஸ் வானியலாளர் கலிலியோ கலிலி பிறெயில் முறைமையைக் கண்டுபிடித்த லூயிஸ் பிறெயில், போன்ற பலர் பல்துறைகளிலும் சாதனை படைத்திருக்கிறார்கள்.

இன்னும் பெயர் தெரியாத பலர் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் தாம் விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள் என ஒதுங்கியிருந்திருந்தால் பல அரிய படைப்புக்கள் எமக்குக்கிடைக்காமலே போயிருக்கும்.

விழிப்புலனற்றவர்களைப் பிரித்துப் பார்க்கும் மனப்பாங்கு எம்மவர் மத்தியிலே இன்னும் காணப்படுகிறது. ஆதலால்தான் எமது சமூகத்தில் விழிப்புலனற்றவர்களால் மேலெழுந்து பிரகாசிக்க முடியவில்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், சமூகத்தின் மனப்பாங்கு மாறும் வரை விழிப்புலனற்றவர்களுடன் கூடிய சமூகம் ஏகவினமான அலகுகளைக் கொண்டிருக்காது. ஆதலால் தான் விழிப்புலனற்றோரின் முன்னேற்றமும் விருத்தியும் தடைப்படுகிறது.

ஆனால் இந்தத் தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக்கி வாழ்க்கையில் முன்னேறிய பல விழிப்புலனற்றோர் எமது நாட்டிலே காணப்படுகிறார்கள் என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.

விழிப்புலனற்றவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கான இல்லங்கள் பலவும் காணப்படுகின்றன. அந்த வகையிலேயே ‘தரிசனம்’ என்ற விழிப்புலனற்றோருக்கான இல்லமும் அமைந்திருக்கிறது.

தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டவென அமைந்திருக்கும் இத்தகைய இல்லங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. அத்தகையதோர் நிலையில் ‘தரிசனம்’ ஆற்றும் சேவைகள் அளப்பரியவை.

‘தரிசனம்’ நிறுவனத்தின் செயலாளரான ரவீந்திரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் சில தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். கிழக்கிலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் நா. இதயராஜன் மற்றும் இலக்கியக் கலாநிதி ம. சிவசுப்பிரமணியம் போன்றோரின் பெருமுயற்சியால் 1992ஆம் ஆண்டு ‘தரிசனம்’ உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

‘தரிசனம்’ நிறுவனத்திற்கு மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரிக்குப் பின்னால் இருந்த காணி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டிலிருந்து அக்காணியிலே தனது சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

அதற்கு முன்னர், ஓய்வுபெற்ற மேலதிக அரச அதிபர் பூ. சங்காரவேல் தனக்குச் சொந்தமான கட்டடத்தில் ‘தரிசனம்’ இயங்க வழிசெய்திருந்தார்.

5 - 12 வயதுக்குட்பட்ட விழிப்புலன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் கல்வி கற்கும் காலத்தில் இடை வயதிலே தமது பார்வைப் பலனை இழந்தவர்களும் கூட வயதெல்லையைக் கருதாது சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

தற்போது அங்கே 13 ஆண் பிள்ளைகளும் 13 பெண் பிள்ளைகளும் தங்கியிருந்து கல்வி பயில்கின்றார்கள்.

ஆண் பிள்ளைகள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் பெண் பிள்ளைகள் கல்லடி விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயில்கின்றார்கள்.

ஏனைய மாணவர்களுடன் சேர்ந்தே கல்வி கற்கும் இம் மாணவர்கள் பிறெயில் முறையிலே குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். மதியம் 2 மணிக்குப் பின்னர் தரிசனத்திலே அவர்களுக்கான வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

பிறெயில் முறையிலே பயிற்றுவதற்காக 6 ஆசிரியர்கள் தரிசனத்திலே கடமை புரிகின்றனர். க. பொ.த. உயர்தரப் பாடத் திட்டத்தைக் கற்பிப்பதற்காக 5 வருகை தரு ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

சங்கீதத் துறையிலும் ‘தரிசனம்’ மாணவர்கள் பயிற்றப்படுகின்றனர். அத்துடன் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளையும் பயின்று வருகின்றனர்.

மதியம் 2 மணிக்குப் பிறகு வகுப்புக்கள் நடைபெறும் பாடசாலைக் கட்டடம் வட-கிழக்கு மாகாண சபையின் உதவியுடனும் மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்றின் உதவியுடனும் கட்டி முடிக்கப்பட்டன.

எதிர்காலத்தில் ‘தரிசனம்’ மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை அமைக்கும் திட்டமும் காணப்படுவதாக ரவீந்திரன் தெரிவித்தார்.

தரிசனத்திலிருந்து இதுவரை காலத்திலும் 13 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருக்கின்றனர். அவர்களுள் 8 பேர் தமது பட்டப்படிப்பை முடித்து வெளியேறிவிட்ட அதேசமயம் ஏனையோர் தமது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இங்கு மாணவர்கள் யாவரும் பிறெயில் முறையிலேயே கல்வி கற்கின்றனர். பரீட்சைகளைப் பொறுத்த வரையிலே, வினாத்தாள் பிறெயில் முறைமைக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு இம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவர்களின் விடைத்தாள் பிறெயிலிலேயே அமைந்திருக்கும். அது மீள மொழி மாற்றம் செய்யப்பட்டுத் திருத்தப்படும்.

முன்னைய காலங்களிலே, பிறவிக் குறைபாடு காரணமாகவும், நோய்த் தாக்கத்தாலும் விழிப்புலனை இழந்த அல்லது விழிப்புலன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் காணப்பட்டனர். ஆனால் தற்போது இணையும் மாணவர்களில் பெரும்பாலானோர் நடந்து முடிந்த யுத்தத்தினால் விழிப்புலனை இழந்தவர்களாகவோ அல்லது விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்களாகவோ காணப்படுகின்றனர்.

இங்கு சேர்க்கப்பட்ட பின்னர், விடுதியிலேயே தங்கிக் கல்வி கற்கும் மாணவர்கள் தவணை விடுமுறைகளுக்கு மட்டும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். அவசரத் தேவையொன்றின் நிமித்தம் தமது வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தால் பெற்றோர்/ பாதுகாவலரின் கோரிக்கைக் கடிதம் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் குறித்த தேவை முடிந்ததும் உடனே ‘தரிசனம்’ நிர்வாகத்தால் மீள அழைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

‘தரிசனம்’ நிறுவனத்தைப் பொறுத்த வரையிலே அது வழங்கும் சேவைகள் முற்றிலும் இலவசமானவையாகும். ‘தரிசனத்தை’ நிர்வகிப்பதற்கான நிதி உள்ளூர் நன்கொடைகள், வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களின் உதவிகள், கொடி தினத்தில் சேர்க்கப்படும் பணம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி முதலாய வழிகளிலே பெறப்படுகிறது.

நல்லுள்ளம் படைத்த அன்பர்களின் உதவியால் பிரச்சினைகள் இன்றி ‘தரிசனத்தை’ நிர்வகிக்கக் கூடியதாக இருப்பதாக செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார். ஆயினும் சில சமயங்களில் நிதி நிலைமையைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் வங்கியிலுள்ள சிறு நிலையான வைப்பின் மூலம் பெறப்படும் வட்டி பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தரிசனத்தை நிர்வகிக்கும் பொதுச் சபையிலே உயர்நிலைகளில் இருக்கும் கற்றோர் பலர் காணப்படுவதால் எந்தவித அதிகார, பதவிப் பிரச்சினைகளும் இன்றி ‘தரிசனம்’ நிர்வகிக்கப்படுவதாக ரவீந்திரன் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தரிசனத்தைப் பொறுத்த வரையிலே, அங்கு தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்கள் யாவருமே விழிப்புலன் பாதிப்பை உடையவர்கள். அவர்களை ஏகவினமான குடியலகுகளாகக் கருதமுடியும். அங்கு விழிப்புலன் பாதிப்பு/ இன்மை என்பது ஒரு குறையாக நோக்கப்படாது. ஆதலால் தான் தரிசன மாணவர்களால் ஏனையோரைப் போலவே தமது வாழ்வியலையும் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது

மாறாக பல பெற்றோர், விழிப்புலன் பாதிக்கப்பட்ட தமது பிள்ளையை விழிப்புலனற்றோர் இல்லங்களிலே சேர்ப்பதை கெளரவக் குறைவாகக் கருதுகின்றனர். அவர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்கவே முயல்கின்றனர். ஒரு எல்லைக்கு அப்பால் அம்முயற்சி சாத்தியப்படாது என்ற உண்மை அவர்களுக்கு விளங்குவதில்லை போலும்! அவ்வாறு வளர்க்கப்பட்ட பிள்ளைகள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப் பட்டவர்களாகவே வாழ்கின்றனர். சமூகத்துடன் இணைந்து வாழ்வதானது மனிதனுக்கே உரித்தான பண்பு. அப்படியிருக்க, அவர்கள் மட்டும் எதற்காக சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ வேண்டும்? என்பதே எம்முள் எழும் வினாவாக இருக்கிறது.

விழிப்புலனற்ற மாணவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை தரிசனத்தில் சேர்த்துவிடுங்கள்; அவர்களது வாழ்வை ஒளிபெறவையுங்கள் என்பதே ரவீந்திரன் எமது சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.

இத்தகைய இல்லங்களில் தமது பிள்ளை நெறிமுறைகள் பிறழாது வளர்க்கப்படுமா? என்றதொரு சந்தேகம் பல பெற்றோர் மத்தியில் எழத்தான் செய்கிறது. ஆனால், அத்தகையதொரு சந்தேகமே தேவையில்லையென நிரூபித்து நிற்கிறது தரிசனம்!

இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியில் விழிப்புலனற்ற மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு காணப்படுகிறது. ஆயினும் இம் மாணவர்கள் ஒரு போட்டிப் பரீட்சையில் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட்டு பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிவாகி வரும் ஒரு விடயமே தரிசனத்தின் செயற்றிறனை விபரிக்கப் போதுமானது.

சற்று வருத்தத்திற்குரிய விடயம் யாதெனில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய இந்த 8 மாணவர்களுக்கும் இதுவரை வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை என்பதாகும்.

அத்துடன், நல்லுள்ளம் கொண்ட அன்பர்களின் உதவியையும் தரிசனம் வேண்டி நிற்கிறது.

இன்று தரிசன மாணவர்களின் முக்கிய தேவைகளுள் ஒன்றாக இருப்பது பிறெயில் முறையில் அச்சிடும் கருவி (ஜிஙுடுடூசிலீஙு) ஆகும். கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும் மென்பிரதி வடிவிலான ஆவணங்களையும் நூல்களையும் இக்கருவி பிறெயில் முறையில் அமைந்தவையாக மாற்றி அச்சிட்டுத்தர உதவும். இக்கருவிக்கான செலவு ஏறத்தாழ 9 இலட்சம் ரூபாவாகும்.

தரிசனத்திலே பிறெயில் முறைமையிலான புத்தகங்களைக் கொண்ட நூலகமொன்றை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அச்சிடும் கருவி இல்லாததால் அப்பணியைத் துரிதமாக முன்னெடுக்க முடியவில்லையென ரவீந்திரன் மேலும் தெரிவித்தார்.

தரிசனத்தைப் பொறுத்தவரையிலே, கணக்கு வழக்குகள் யாவுமே வெளிப்படையானவையாகும். ஆதலால் அவை தொடர்பான ஆவணங்கள் எண்ணிக்கையில் அதிகமாகப் பிரதியிடப்படுகின்றன. ‘தரிசனம்’ நிறுவனத்திடம் ஆவணங்களைப் பிரதி செய்யும் இயந்திரம் சொந்தமாக இல்லாமையால் குறிப்பிட்டளவு தொகை பணம் அதற்காகச் செலவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தரிசனம்’ நிறுவனத்தினர் இம்முறை வெள்ளைப்பிரம்பு தினத்தை, பதுளை மத்தி லயன்ஸ் கழகத்துடன் இணைந்து பதுளையில் கொண்டாடவிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தரிசனம்’ அமைப்பைத் தொடர்பு கொள்ள விரும்புவோர் +94652223489 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது னீகீஹஙுடுஙூஹடூஹசீஸஹசிசிடுணீஹங்ச்ஹஃ ஙுச்ணீகூலீசிசீஹடுங்.ணீச்சீஎன்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தொடர்பு கொள்ள முடியும்.

இரண்டு கண்களும் நன்றாக அமைந்து நாம் விரும்பியபடி இப்பூவுலக வாழ்வின் இன்பங்களை எல்லாம் கண்டு களிக்கும் வாய்ப்பை இறைவன் எமக்கு அளித்திருக்கிறார். ஆனால் நாமோ அந்த வாய்ப்பைப் பொருட்படுத்துவது கூட இல்லை. தீயவைகளில் மனதைச் செலுத்துவதிலேயே பெரும்பாலான காலத்தைப் போக்கிவிடுகிறோம். நல்லபல விடயங்களைப் பொறுத்தவரையிலே கண்ணிருந்தும் குருடராகி விடுகிறோம்.

ஆனால் மாறாக விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள் தொழில் நுட்பத்தையும் முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையையும் கொண்டு தமது வாழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். தாம் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை தினம் தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே? இது நாம் சிந்திக்க வேண்டிய தருணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக