15 அக்டோபர், 2010

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாண பணிகளில் சீனக் கைதிகள்:ஐ.தே.க

தலைநகரில் வாழும் 65 ஆயிரம் குடும்பங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இடம்பெயரச் செய்து அந்தக் குடும்பங்களுக்கு புறநகர்ப் பகுதியான ஹோமாகமையில் முகாம் வாழ்க்கையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டு வருகின்ற அரசாங்கம் தலை நகரிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான 1,300 ஏக்கர் காணியை கையகப்படுத்தி அதனை சீனாவுக்குத் தாரைவார்க்கத் தீர்மானித்திருக்கின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தலைநகரின் சேரிப்புற மக்களின் மீது உண்மையாகவே அரசாங்கத்திற்கு அக்கறையிருக்குமானால் அவர்களது சொந்த நிலங்களிலேயே வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகளில் சீனக் கைதிகள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். இத்தகைய செயற்பாடு சீன ஆக்கிரமிப்பாகவே இருக்கின்றது என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்: கொழும்பு மாநகர சபையை ஒருபோதும் அரசாங்கத்தினால் வெற்றி கொள்ள முடியாது என்பதனாலேயே அதனை அதிகார சபையாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அது மட்டுமல்லாது தலைநகரிலே சேரிப்புறங்களில் வாழ்கின்ற மக்களை அப்புறப்படுத்தி நகரை அழகுபடுத்தப் போவதாகவும் கூறுகின்றது. அரசாங்கத்தின் இந்த முன்னோடித் திட்டமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்த போது அவரூடாகவே வெளிப்பட்டிருந்தது.அதன் பின்னர் பொருளியல் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்சவும் இது குறித்து ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தை அறிந்து கொண்டமையால் தான் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம். இதனைக் கண்டு அரசாங்கம் தற்போது கலவரமடைந்துள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் கூறுவது போல எதுவும் இல்லையென்றும் அவர் அரசியல் இலாபம் கருதி இவ்வாறு பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலர் கூறுகிறார்.

உண்மையைக் கூறினால் தலைநகரில் சுமார் 60 முதல் 80 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற சேரிப் புறங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களை ஹோமாகமை போன்ற பிரதேசங்களில் குடியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. வேறு வகையில் கூறினால் அந்த மக்களை இன்னும் மூன்றே மாதங்களில் தலைநகரில் இருந்து இடம்பெயரச் செய்து அவர்களுக்கு ஹோமாகமையில் முகாம் வாழ்க்கையொன்றை ஏற்படுத்திக்கொடுக்க அரசு தயாராகி வருகின்றது என்பதே சரியாகும்.இந்த மக்களை இங்கிருந்து அகற்றுவதானது நகரை அழகுபடுத்துவதற்காகவே என்றும் அரசு கூறுகின்றது. இதன் பின்னணியில் அந்த மக்களின் நிலங்களைக் கைப்பற்றுவதும் அதனை சீனாவின் கம்பனிகளுக்கு தாரை வார்ப்பதுமே திட்டமாக இருக்கின்றது.

ஹிட்லர் காலத்திலும் இவ்வாறு தான் நகரை அழகுபடுத்துவதாகக் கூறி மக்களின் வாழ்விடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் தூர இடங்களில் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர். அதேபோன்றதொரு நிலைமையே இன்றைய அரசாங்கத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சேரிப்புற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும் அந்த மக்களின் சொந்த இடங்களிலேயே அதனை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.அதனை விடுத்து சொந்த நிலங்களை பறித்துக்கொண்டு வேறு பிரதேசங்களில் கொண்டு குடியேற்றுவதை நாம் ஏற்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலப்பகுதியில் நானும் அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத கட்டிடங்களை அப்புறப்படுத்தினோம். ஆனாலும் அந்த மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கவில்லை.

மாற்றுத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தோம். வனாத்தமுல்லையில் அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளையும் புறக்கோட்டையில் உலக சந்தை வியாபார மையத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். இவர்களை வேறு பிரதேசங்களுக்கு துரத்தி விடுவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. ஆனாலும் இன்று தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என்பதற்காகவே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை அறிவதற்கு மக்களின் அபிப்பிராயத்தை பெறவேண்டியது அவசியமாகும்.அந்த வகையில் தலைநகர் தொடர்பில் அரசின் திட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்திக் காட்டவேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம். மேலும் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளிலும் சீனக் கைதிகளை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது சீன ஆக்கிரமிப்பாகவும் இருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக