3 ஜூலை, 2010

தமிழ்க் கட்சிகளிடையேயான இன்றைய சந்திப்பு தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து




தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுகாலை இரண்டாவது தடவையாக கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. அத்துடன் மீண்டும் எதிர்வரும் ஏழாம் திகதி கூடுவதென்றும் அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா), தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறீ ரெலோ ஆகிய கட்சிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தன. இக்கலந்துரையாடல் தொடர்பில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் பல தமிழ்க் கட்சிகள் கூடி கலந்துரையாடினோம். இதில் கலந்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நானும் சிவாஜிலிங்கம் அவர்களும் கதைத்தபோது இரா.சம்பந்தன் அவர்கள் மறுப்புக் கூறவில்லை. தன்னுடைய கட்சியுடன் கலந்து ஆலோசித்துவிட்டு கூறுவதாக தெரிவித்தார். இது மிகவும் சிறந்ததொரு ஆரம்பமாகவே நான் பார்க்கின்றேன். நிச்சயமாக இதுவொரு தேர்தலுக்கான கூட்டு அல்ல. சில வேளைகளில் தேர்தல்களில் கட்சிகள் தனித்தனியாகவோ அல்லது வேறு கூட்டுகளில் இருந்தோ கேட்கலாம். இது ஒரு அரங்கம் என்றவாறே நாம் கூறமுடியும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துபேசி ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டுவர வேண்டுமென்கிற ஆர்வத்தை இங்கு கலந்து கொண்டிருந்த ஒவ்வொருவரிடையேயும் என்னால் பார்க்கக் கூடியதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகவியலாளரின் கேள்விகளுக்கும் புளொட் தலைவர் பதிலளித்துள்ளார்.

கேள்வி: இனப்பிரச்சினை தொடர்பாக இந்தக் கட்சிகளின் மத்தியில் ஏதேனும் பேசப்பட்டதா?

பதில்: அடிப்படையிலேயே இதுபற்றி எதுவுமே இன்று பேசப்படவில்லை. அதாவது நாங்கள் அனைவருமே கட்சிகளை ஒன்றுபடுத்திக் கொண்டுவர வேண்டுமென்பதிலேதான் ஆர்வமாக இருந்தோம். அதைவிட உடனடிப் பிரச்சினைகள், உதாரணமாக உயர்பாதுகாப்பு வலயம் அல்லது மக்கள் குடியேற்றப்படாமை இவை சம்பந்தமாக எங்களுடைய ஆட்சேபத்தை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்க வேண்டுமென்ற கருத்துக்கள் கூறப்பட்டன. ஆனால் அடுத்த கூட்டத்திலேதான் இவ்விடயத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்.

கேள்வி: இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரியவகையில் அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்: நானும் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் திரு சம்பந்தன் அவர்களுடன் கதைத்திருந்தோம். அவர் அது தொடர்பில் ஆர்வமாகவும், ஆதரவாகவுமே கதைத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கலந்து ஆலோசித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருக்கின்றார். அவர்களை மீண்டும் மீண்டும் கலந்து கொள்வதற்கு கேட்பதற்கும் யோசித்துள்ளோம். நிச்சயமாக அவர்களும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாகுமென்றே நினைக்கின்றேன்.

கேள்வி: இந்தக் கட்சிகள் ஒன்று கூடியதற்கும் தேர்தல்களுக்கும் ஏதேனும் தொடர்புகளுண்டா?

பதில்: இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் வருகின்றபோது தேர்தல் கூட்டுக்கள் எவ்வாறு மாறும் எவ்வாறு இருக்குமென்பதைப் பற்றி தற்போது கூறமுடியாதிருக்கின்றது.

கேள்வி: எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உங்களுடைய கட்சி போட்டியிடுமாக இருந்தால் எவ்வாறான முடிவினை எதிர்பார்க்கிறீர்கள்:

பதில்: கடந்த பாராளுமன்றத் தேர்தல் போலல்லாமல் இம்முறை கவனமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து ஒரு கணிசமான அங்கத்துவத்தை பெற வேண்டுமென்ற ஆர்வமிருக்கிறது. அதற்காக தனித்துப் போட்டியிடுவோமென்று நான் கூறவரவில்லை. எப்படியும் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவந்து போட்டியிடுவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமென்று நான் கருதுகிறேன்.

கேள்வி: தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கம் தற்போது வெளிப்படுகிறதா?

பதில்: அது ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற நிலைமைக்குப் போகக் கூடாது. ஜனநாயகம் இருக்கவேண்டும். சில விடயங்கள் தொடர்பாக கருத்தொற்றுமை இருந்தால் அதுவே ஒரு மிகப்பெரிய விடயமாக இருக்கும். முக்கியமாக அரசியல்தீர்வு சம்பந்தமாகவும், மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும், அதனை அணுகுவது சம்பந்தமாகவும் ஒத்தகருத்துகள் இருக்குமென்றால் அது ஒரு மிகப்பெரிய விடயமே.

கேள்வி: தேர்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறான நிலையேற்படும்போது தமிழ்க் கட்சிகளுடைய வாய்ப்புகள் எவ்வாறு இருக்கும்?

பதில்: அரசாங்கத்திற்கு உள்ளேயே அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் உருவாகிக் கொண்டு வருகின்ற காரணத்தினால் விரைவில் தேர்தல் முறைகள் மாற்றப்படுமென்று நான் நம்பவில்லை. தேர்தல் முறைமைகள் மாற்றப்பட்ட பின்புதான் நாங்கள் அது பற்றி தீவிரமாக ஆராயமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக