3 ஜூலை, 2010

தமிழர் பகுதியில் ராணுவ குடியிருப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்

தீவு பகுதியில் ராணுவ குடியிருப்பு அமைப்பதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினருக்கு நிரந்தர குடியிருப்பு கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை இலங்கை அரசு கைவிட வேண்டும்.

மேலும், வன்னி உள்ளிட்ட தமிழர் வசிக்கும் பகுதிகளில் புதிதாக ராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது. வன்னிப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட ராணுவ முகாமை உடனடியாக மூடவேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜனத் ஜெயசூர்யா அண்மையில் பேசும்போது, முல்லைத்தீவு பகுதியில் ராணுவ வீரர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று கூறினார். இந்த திட்டத்துக்கு ஆனந்தசங்கரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்த அவர், போரில் ராணுவம் வெற்றிப் பெற்றதை பாராட்டி எழுதினார்.

தமிழர் பகுதியில் மீண்டும் வன்முறை தலைதூக்கக்கூடாது, நாட்டில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தமிழர் வசிக்கும் பகுதிகளில் அண்மைக்காலமாக ராணுவத்தினரும், சிங்கள மக்களும் அதிக அளவில் குவிக்கப்படுவது தமிழர் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக