3 ஜூலை, 2010

எந்தச் சவாலையும் இலங்கை ஏற்றுமதித்துறை எதிர்கொள்ளும் : மத்திய வங்கி

ஜி.எஸ்.பி பிளஸ் உட்பட எந்தச் சவாலையும் இலங்கை ஏற்றுமதித்துறை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் ஏற்றுமதி வரிச்சலுகை நிறுத்தப்படக் கூடும் என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"2009 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, இலங்கையில் தைக்கப்பட்ட ஆடைகளில் 50 வீதமானவை மாத்திரமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்படி ஏற்றுமதி செய்யப்பட்டவற்றில் 60 வீதமானவை மாத்திரமே ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றன.

ஒட்டுமொத்தமாக 78 மில்லியன் யூரோக்கள் மாத்திரமே இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையால் கிடைத்த பலன்.

இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் மாத்திரம் வழங்கப்படும் ஒரு தலைப்பட்ச வரிச்சலுகை. அது பரஸ்பரம் நன்மையானதல்ல. அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்ற ஆபத்தை கடந்த காலங்களில் ஏற்றுமதியாளர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளோம்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை ரத்தால் ஏற்படக்கூடிய சவால்களை இலங்கை ஏற்றுமதித்துறை இலகுவாக எதிர்கொள்ளும் நிலையை எட்டியுள்ளது."

இவ்வாறு மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக