3 ஜூலை, 2010

இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடுவது யார்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்





இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்கள் தம்மை உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தியது.

மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மறந்துவிட முடியுமா?

இலங்கையில் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச் சங்கிலிகளும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

அப்போது அறிக்கை விடுத்த ஜெயலலிதா, ""ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.

ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக