21 ஜூன், 2010

சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள்-நளினியை விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள்-நளினியை    விடுதலை செய்ய வேண்டும்:    திருமாவளவன் அறிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தாய்த் தமிழை வழக்கு மொழியாக்கிட வலியுறுத்தி உயர்நீதிமன் வழக்கறிஞர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாகும்வரை உண்ணாவிரத அறப்போர் நடத்தி வருகின்றனர். தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவையில் 3 ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பாக இந்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.

இந் நிலையில் தான் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வற்புறுத்தி தமது உயிரைப்பணயம் வைத்து களமிறங்கியுள்ளனர்.

இளமையும், மூப்பும், புதுமையும், பழமையும் ஒருங்கே பெற்ற உயர் தனிச் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு உலகரங்கில் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் கலைஞரின் அளப்பரிய முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடை பெறுகிறது.

தமிழை உயர்நீதி மன்றத்தின் அலுவல் மற்றும் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என தமிழக அரசையும், விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.

அவ்வாறு செம்மொழியாம் தமிழ் மொழியை வழக்கு மொழியாக வென்றெடுப்பது கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றியாக அமையும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் தமது சாதனைப்பட்டியல் வரிசையில் தமிழ்மொழியை வழக்கு மொழியாக்கிய சாதனையையும் இணைத்துக் கொள்ளும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இம் மாநாட்டையொட்டி நீண்ட காலமாக விசாரணை இல்லாமல் செங்கல்பட்டு மற்றும் பூந்த மல்லி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு ஈழத் தமிழர்களையும், ஆயுள் காலத்தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறைப்பட்டிருக்கும் நளினி, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளான இஸ்லாமிய இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

செம்மொழி மாநாட்டையொட்டி சென்னை பெரு நகரத்தில் கடைகளில் விளம்பர பலகைகள், தமிழில் எழுதப்பட வேண்டுமென சென்னை பெருநகர மேயர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. ஆனால் இந்த அறிவிப்புக்கு மதிப்பளித்து விளம்பரப் பலகைகள் முழுவதுமாக இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

எனவே எழுத்து மாற்றமாக அமையாமல் சொற்கள் மாற்றமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், சென்னை பெருநகரத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக