21 ஜூன், 2010

செம்மொழி மாநாடுக்கு புலிகள் ஆதரவு: பாராட்டுகிறார் முதல்வர்





சென்னை: "தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள, விடுதலைப்புலிகளின் அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதாக' முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகள், "திடீர்' அறிக்கை வெளியிட்டுள்ளனர். புலிகளின் இந்த அறிக்கை, நேற்றைய, "தினமலர்' நாளிதழில் வெளியானது. புலிகளின் இந்த திடீர் அறிக்கை, உலகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "இந்த அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களைப் பாராட்டுவதாகவும்' முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி, அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகிற இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு, செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். "தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்கு எங்கள் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு, வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா' என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துக்களில் எள்ளளவும் வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

"இலங்கையில் நடந்த அவலத்தை, அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்து விடுமோ என்று அஞ்சுகிறேன். சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, "அவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல' என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினர், இன்னமும் குலவிக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.

இந்த நேரத்தில், மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கிவிடாது; ஒரு காலத்தில் உதறிக்கொண்டு, எழுந்து பேசத்தான் போகிறது. இதற்கிடையே, எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போல பதறித் துடித்து, ராமாயணத்து கூனி போல பாட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போது, "இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு' என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எங்கள் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்' என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அறிக்கையை வரவேற்று, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் எந்த இடத்திலும், "விடுதலைப்புலிகள்' என்ற வாசகத்தை பயன்படுத்தாமல், "அமைப்பு' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக