21 ஜூன், 2010

அகதிகளின் கெடுபிடிகளை அரசு தளர்த்த வேண்டும் : ஆஸி. கிரீன் கட்சி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தொடர்பான கெடுபிடிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் தளர்த்த வேண்டுமென அதன் க்ரீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் க்ரீன் கட்சி இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கைகளை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளினால் ஏற்படக் கூடிய விளைவுகள் உணரப்பட வேண்டுமென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் கால வரையறையின்றி பாலைவனச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் , இதனால் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரிய உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை மக்களை துன்பப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென அவுஸ்திரேலிய க்ரீன் கட்சியின் செனட்டர் சாரா ஹென்சன் யொங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் 96 வீதமானவர்கள் உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதவி தேவைப்படும் மக்களை தற்போதைய அரசாங்கம் நடத்தும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக