18 மே, 2010

அகதிகளாக தமிழர்கள் வாழும்போது வெற்றிவிழா தேவைதானா- ஜயலத் ஜெயவர்த்தன

யுத்த வெற்றிக்கு முதலிடம் வழங்கிக் கொண்டாட்டம் நடத்தும் அரசாங்கம் இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதைக் கைவிட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன தெரிவித்தார்.

நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சுதந்திரமாக, அச்சமின்றி வாழும் சூழலிலேயே வெற்றி விழா கொண்டாடப்பட வேண்டும். ஆனால், தமிழ் மக்கள் அகதிகளாக வாழும் போது இவ்விழா தேவைதானா என்று கேள்வியும் எழுப்பினார். அரசாங்கத்தின் யுத்த வெற்றி விழா தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ வெற்றி ஒரு புறம். ஆனால், மறுபுறம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிர்க்கதியாகி அகதிகளாக வாழும் நிலைமை காணப்படுகிறது. இன்றைய மோசமான காலநிலையிலும் 75000 மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் தகரக்கூடுகளில் வாழ்கின்றனர். மேலும் இரண்டு இலட்சத்திற்கு மேலான மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் 4 தகரங்கள் வழங்கப்பட்டு எதுவிதமான அடிப்படை வசதிகளும் வழங்கப்படாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் யுத்தத்தால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் பாதிக்கப்பட்ட மக்களும் எமது நாட்டு பிரஜைகளேயாவர். எனவே, அம்மக்களுக்கு வசதிகளை வழங்கி அச்சமின்றி சுதந்திரமாக வாழும் நிலைமையை உருவாக்கி கொடுப்பதோடு அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஐ.தே.கட்சி என்றும் மனித உரிமைகள், ஜனநாயக சுதந்திரத்தை மதிக்கும் கட்சியாகும். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்ததை வரவேற்கின்றோம். ஆனால், அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மனிதாபிமானமாக நோக்க வேண்டும். யுத்தத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் வெற்றி மறுபக்கம் மனிதாபிமானம் என்றும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக