5 ஏப்ரல், 2010

ஐந்து வருட காலத்தில் துரித பொருளாதார வளர்ச்சி





தந்திரம் கிடைத்தது முதல் 2005 ஆம் ஆண்டு வரை தனி நபர் வருமானம் 1062 டொலர்களாகவே இருந்தது. இது கடந்த 5 வருடத்தில் இரு மடங்காக அதிகரித்து 2055 டொலர்க ளாக உள்ளது. கிராமங்களுக்குச் சென்றால் இந்த மாற்றத்தை கண்கூடாகக் காணலாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலக பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பாகத்தில் 6.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தமை நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும். நாம் எதிர்பார்க்கும் எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைவதற்கு சிறந்த குழுவொன்றை எதிர்வரும் தேர்தலில் மக்கள் தெரிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின் பட்டினியும் வேலையின்மையும், அழிவுகளுமே எஞ்சியிருந்திருக்கும். ஆனால் யுத்தம் முடிந்த 3 மாத காலத்தில் இலங்கைக்கு சர்வதேச வரவேற்பு கிடைத்துள்ளது. முதலீடு செய்வதற்கும் சுற்றுலா செல்வதற்கும் ஏற்ற நாடு என சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளுமளவு சிறப்பாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப் படுவதாவும் அவர் கூறினார். மத்திய வங்கியின் 2009 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை நேற்று (5) வெளியிடப்பட்டது. இதன் முற் பிரதியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

கடந்த காலங்களில் உலகில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. எரிபொருள் விலை அதிகரித்ததோடு வங்கித்துறையும் வீழ்ச்சியடைந்தது. இந்த நெருக்கடிகள் காரணமாக 6 மாதங்களில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் என்று கூறிக்கொள்வோரும் அரசியல்வாதிகளும் ஆரூடம் தெரிவித்தனர். இலங்கைக்கு கடனோ, ஜி. எஸ். பி. சலுகையோ வழங்காதே என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்த சவால்களுக்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளோம்.

யுத்தத்தின் பின்னர் கண்ணீர் மட்டுமே மிஞ்சும். மக்களுக்கு எதுவித நிவாரணமும் தர முடியாது என சேர்வின்சர் சேர்சில் கூறியிருந்தார். ஆனால் நமது நாட்டில் அத்தகைய நிலை உருவாகவில்லை. யுத்தம் முடிவடைந்து 6 மாதங்களுக்குள் முதலீடு செய்வதற்கு ஏற்ற 36 நாடுகளில் ஒன்றாக இலங்கை அறிவிக்கப்பட்டது. சுற்றுலா செல்லக் கூடாது என எச்சரிக்கப்பட்ட நாடு தற்போது சுற்றுலா செல்லச் சிறந்த நாடாக ஏற்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.

கடந்த காலங்களில் மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 சத வீதமே உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டு முதல் 6 சதவீதத்தை விட அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது.

முன்பு யுத்த தாங்கிகள் சென்ற வீதிகளில் இன்று டிரக்டர்கள் செல்கின்றன. ஆயுதத்தினால் மீட்கப்பட்ட பூமி தற்போது ஏர் கொண்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

சுதந்திரம் கிடைத்தது முதல் 2005 ஆம் ஆண்டு வரை தனி நபர் வருமானம் 1062 டொலர்களாகவே இருந்தது. இது கடந்த 5 வருடத்தில் இரு மடங்காக அதிகரித்து 2055 டொலர்களாக உள்ளது. கிராமங்களுக்குச் சென்றால் இந்த மாற்றத்தை கண்கூடாகக் காணலாம்.

தினமும் ஒரு கோடி 30 இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள் பாவிக்கப்படுகின்றன. தினமும் பெருமளவு குறுஞ் செய்திகள் பரிமாறப்படுகின்றன. இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம் என்பன கிடையாது என சில தரப்பினர் குற்றஞ் சாட்டுகின்றனர். ஆனால் 35 க்கும் அதிகமான பத்திரிகைகள் வெளிவருதோடு 30 ற்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வானொலி சேவைகள் உள்ளன. அவை குறைவில்லாமல் அரசாங்கத்தை விமர்ச்சிக்கின்றன.

பண வீக்கம் பெருமளவு குறைந்துள்ளதோடு வட்டி வீதமும் குறைவடைந்துள்ளது. மேலைத்தேய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகையில் நமது நாடு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை கண்டிருக்கிறது. இது தற்செயலாக நிகழ்ந்ததல்ல.

மஹிந்த சிந்தனையூடாக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வங்கித் துறையை கட்டியெழுப்பவும் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிக்கவும் முடிந்தது.

2009 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் 2 சத வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் டிசம்பர் ஆகும் போது 6 வீதமாக உயர்ந்தது. இந்த வெற்றி தனி நபருக்குக் கிடைத்த வெற்றியல்ல. இதனை ஏற்றுக் கொள்ள சிலர் தயாராக இல்லை.

இது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே காட்டுகிறது.

விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் கஷ்டப்படுவதாக ஊடகங்களின் மூலம் காட்டப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு தங்களுக்கு 1350 ரூபா செலவாவதாகவும் ஆனால் அரசு 26 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாமல் பாதிக்கப்படுவதாக பொய்ப் பிரசாரமே செய்யப்படுகிறது.

யுத்தம் முன்னெடுக்கப்படும் போது எம்மால் யுத்தம் செய்ய முடியாது என்று கூறியவர்கள் இன்று எம்மால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்கின்றனர்.

தாய் நாடு குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இன்று உருவாகியுள்ளது. நாட்டுக்குப் பாதகமாகச் செயற்பட்டவர்களை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பகிஷ்கரித்துள்ளனர். இந்தத் தேர்தலிலும் அத்தகையவர்களை மக்கள் நிராகரிப்பது உறுதி.

எமது நாட்டைக் கட்டியெழுப்ப அமெரிக்கா, பிரான்ஸ் என வெளிநாடுகளின் உதவி தேவையில்லை. இது எமது நாடு இதனை நாமே கட்டியெழுப்ப வேண்டும்.

பயங்கரவாதம் நிறைவடைந்துள்ளதோடு பொருளாதார நெருக்கடியும் வழமைக்குத் திரும்பி வருகிறது.

வடக்குப் பிரதேசம் வேகமாக அபிவிருத்தியடைகிறது. வீதிகள், வீடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. ஓலை வீடுகள் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் எதிர்பார்த்துள்ள இலக்குகளை அடைவதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும். கடந்த காலங்கள் போலன்றி மக்களின் மனத்துடிப்பை அறிந்து புரிந்துணர்வுடன் செயற்படும் நிறுவனமாக மத்திய ரிசீகி வளர்ச்சியடைந்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக