5 ஏப்ரல், 2010

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இராணுவ நீதிமன்றத்தைக் கூட்ட முடியாது : ஜ.தே.க.





இராணுவ நீதிமன்றம் தொடர்பிலான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் அறிவித்திருப்பதைப் போல், நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றம் கூட்டப்படுமானால் அது சட்டத்துக்கு முரணானதாகும்.

அவ்வாறு நடைபெறின் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எச்சரித்துள்ளது.

றோயல் கல்லூரி மாவத்தையில் அமைந்துள்ள கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளரும் எம்.பி.யுமான அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

"இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் நடத்தப்படுகின்ற விதம் தொடர்பிலும் மேலும் பல காரணங்களை உள்ளடக்கியதுமான மனு மீதான விசாரணை நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

அத்துடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானங்கள் தொடர்பிலும் அதன் நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.

அதுவரையில், ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இடை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை 6ஆம் திகதி. ஒத்திவைக்கப்பட்டிருந்த ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுகளின் பிரகாரம் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படுமானால் அது சட்டப்படி தவறாகும். அது மட்டுமல்லாது இந்த செயல் நீதிமன்றத்தையே அவமதிப்பதற்கு சமனானதாகும்.

எனவே நாளைய தினம் இராணுவ நீதிமன்றத்தை கூட்டவும் முடியாது. விசாரணைகளை முன்னெடுக்கவும் முடியாது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நாளை ஜெனரல் பொன்சேகா விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரேயானால் அந்த நீதிமன்றத்துக்கு எதிராகவும் அதில் அடங்கியுள்ள நீதிபதிகளுக்கு எதிராகவும் நாம் நீதிமன்றம் செல்வோம்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது தொடர்பில் எமது சட்ட ஆலோசகர்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக