5 ஏப்ரல், 2010

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டை கட்டியெழுப்ப அணிதிரளுங்கள்




ஐ.ம.சு.மு பிரசாரத்தை முடித்துவைத்து மித்தெனியவில் ஜனாதிபதி உரை
எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக நாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மித்தெனிய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமாக அமைந்த இம்மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தனி நபர் வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைப் பெற்றுத்தருவது மக்களின் பொறுப்பாகும்.

நாம் பலமாக எமது பயணத்தைத் தொடர வேண்டுமானால் பெருமளவிலா னோரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இரண்டாகப் பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஒன்றிணைத்து தொங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற பலத்தையும் பலப்படுத்தினோம். யுத்தம் நடந்தபோதும் நாம் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட் டிருந்த அபிவிருத்தியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் உட்பட இலட்சக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கினோம்.

இராணுவத்தினர் உளரீதியில் பலவீனமடைந்திருந்தவேளையில் அவர்களுக்குப் பலமூட்டியது போன்றே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களையும் தைரியப்படுத்தியுள்ளோம்.

நாம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கையில் அதனைக் காலதாமதப்படுத்த மங்கள சமரவீர போன்றோர் செயற்பட்டனர். அதனால்தான் நாம் அத்தகையோரை ஒதுக்கிவிட்டோம். அப்பதவியில் பொருத்தமான அமைச்சரையும் நியமித்தோம்.

இளையோரின் பலமும் திறமை மிக்க தலைமைத்துவமும் நாட்டின் எதிர்காலத் தேவையாகிறது. அத்துடன் எமது பாரம்பரிய விழுமியங்கள் கலாசாரங்களைப் பாதுகாத்தே நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமுள்ளது.

நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ரணில் விக்கிரம சிங்கவின் காலத்தில் விமான சேவை உட்பட பல தவறான - பொருத்தமில்லாத உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாம் இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாம் பலமான நாட்டை நேசிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளோம்.
நாமனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக