5 ஏப்ரல், 2010

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு





ஏழாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என அறிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம், அதற்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறும் பணித்துள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 24 மணிநேரத்திற்குள் சகல சுவரொட்டிகள், பதாகைகள், 'கட்அவுட்' கள் மற்றும் கொடிகளை அகற்றிவிடுமாறும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுவோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே விருப்பு இலக்கம் மற்றும் சின்னத்தைப் பொறிக்கமுடியும். வேட்பாளர் பயணிக்காத வாகனங்களில் கொடிகள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அவ்வாறான வாகனங்களைக் கைப்பற்றுவதுடன் அதில் பயணிப்போரையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, பிரதான கட்சிகள் தங்களுடைய இறுதிப் பிரசாரக் கூட்டங்களைத் தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடத்தவிருக்கின்றன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசார கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மிந்தெனியவிலும், ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பலாமரச் சந்தியிலும் நடைபெறவுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஜனநாயக தேசிய கூட்டணி ஏற்பாடு செய்துள்ள இறுதி தேர்தல் பிரசார கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் புதுக்கடையில் நடைபெறவிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக