15 மார்ச், 2010

தமிழ் தேசிய கூட்டணி தனி ஈழ கொள்கையை கைவிட்டுள்ளது.




இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த கட்சி,​​ இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடப் போவதாகவும் உறுதிபூண்டுள்ளது.

பல ஆண்டுகளாக தனி ஈழத்தை ஆதரித்து வந்த தமிழ் தேசிய கூட்டணி தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியுள்ளது இலங்கை அரசியலில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட பின் இலங்கையில் தனி ஈழத்துக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள அடுத்த கட்ட பின்னடைவு இது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இலங்கையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.​ இதனை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டணி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி இணைந்த ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.​ 1987-ல் ​ ஏற்பட்ட இந்திய-​ இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் அப்பகுதிகளுக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் கட்சி போராடும்.​ இது தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை பிரித்ததன் மூலம் இந்திய-​ இலங்கை ஒப்பந்தத்தை அரசு மீறிவிட்டது.​ இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுத்து வந்துள்ளன என்றும் தமிழர் தேசிய கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் பலமுறை கவலை தெரிவித்தும் இலங்கை அரசு அதனை பொருட்படுத்தவில்லை.​ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறி தமிழர்களுக்கு எதிராக பலமுறை மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களும்-​ முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​ இதனிடையே,​​ "இலங்கையில் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அமைச்சர் திசா விதாரனே குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக