15 மார்ச், 2010

மும்பையில் தாக்குதல் நடத்தியபோது நடந்த சண்டையில் பலியான தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் நஷ்ட ஈடு



மும்பையில் தாக்குதல் நடத்தியபோது நடந்த சண்டையில் பலியான தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் நஷ்ட ஈடு வழங்கி உள்ளதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 173 பேர் பலியானார்கள். அப்போது, அதிரடிப்படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கையின்போது தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். மற்ற 9 பேரும் பலியானார்கள்.

லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் என்றும் அந்த இயக்கம் தான் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து உள்ளது.

இதற்கிடையில் இந்த தாக்குதலின்போது, அதிரடிப்படையின் நடவடிக்கையில் பலியான தீவிரவாதிகளின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் நஷ்ட ஈடு கொடுத்து உள்ளதாக தனக்கு தகவல் கிடைத்து இருப்பதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கர்மன் தெரிவித்தார்.

ராணுவத்தின் குழந்தை

இவர் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பாராளுமன்ற துணைக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார். பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பற்றி விவாதிப்பதற்காக அந்த குழுவின் தலைவர் என்ற முறையில் துணைக்குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசியபோது தான் இந்த தகவலை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை தெரிவித்த அவர் அதற்கு மேல் விவரம் எதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த ஆசிப் நவாஸ் ஜன்ஜுவாவின் தம்பியான ஷூஜா நவாஸ் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் லஸ்கர் இ தொய்பாவை உருவாக்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் என்று தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது-

காஷ்மீரி சுதந்திர போராட்டத்துக்காக...

காஷ்மீரி சுதந்திர போராட்டத்துக்கு உதவுவதற்காக தான் லஸ்கர் இயக்கம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வந்த அதிபர்கள் சக்தி வாய்ந்த இந்தியாவை எதிர்கொள்வதற்கான மிகப்பெரிய சொத்தாக லஸ்கர் இயக்கத்தை கருதினார்கள். அதற்கு ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் அந்த இயக்கம் காலப்போக்கில் சுதந்திரமான தனி அமைப்பாக செயல்பட தொடங்கி விட்டது.

இவ்வாறு ஷூஜா நவாஸ் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக