15 மார்ச், 2010

90 சதவீத பக்தர்கள் என்னை நம்புகிறார்கள்: ஆன்மீகப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் சாமியார் நித்யானந்தா பேட்டி





சுவாமி நித்யானந்தா தற்போது அரித்துவாரில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்கு அவர் எங்கு தங்கியிருந்து புனித நீராடி வருகிறார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- நடிகை ரஞ்சிதாவுடன் நீங்கள் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் உண்மையானதுதானா? அதில் இருப்பது நீங்கள் தானா?

நித்யானந்தா பதில்:- எனக்கு எதிராக நிறைய சதி நடந்துள்ளது. உண்மைக்கு மாறாக தகவல்களை திரித்து வெளியிட்டு விட்டனர். எனக்கு எதிராக மிக அதிகப்படியான வதந்தி பரப்பப்பட்டு விட்டது.

கேள்வி:- வீடியோ காட்சியில் வரும் பெண் யார்? என்று உங்களுக்கு தெரிகிறதா?

பதில்:- ஆமாம். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். எங்களது தியானப் பீடத்துக்கு வரும் பக்தர்களில் அவரும் ஒருவர். அவர் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார்.

அந்த சமயத்தில் நான் உடல் நலம் சரி இல்லாமல் இருந்தேன். பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள எனது அறையில் ஓய்வு எடுத்து வந்தேன். எனது அறைக்கு எல்லா பக்தர்களும் வந்து செல்வார்கள். அது எப்போதும் திறந்தே இருக் கும். அப்படித்தான் நீங்கள் குறிப்பிடம் பக்தரும் வந்து சென்றார்.

கேள்வி:- தொலைக்காட்சியில் உங்களது வீடியோக் காட்சிகள் ஒளி பரப்பான பிறகு, நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு கொண்டு பேசினீர்களா?

பதில்:- இல்லை. நான் பேசவில்லை. ஆனால் அந்த வீடியோவில் உள்ள சதி திட்ட தகவல்களை சேகரிப்பதற்காக எமது தியான பீட அன்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி விளக்கம் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி:- உங்களுக்கு எதிரான இந்த சதி திட்ட பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- என் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்கு தல்களை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார் என்றே தெரியவில்லை. நாங்கள் எப்போதும் எல்லோரிடமும் மென்மையாகவும், அமைதியாகவுமே இருக்கிறோம். படுக்கை அறையில் நான் இருப்பது போன்ற காட்சிகளை எடுத்தது லெனின்தான் என்பது, பத்திரிகைளை பார்த்த பிறகே எனக்குத் தெரிய வந்தது.

கேள்வி:- லெனின்தான் இந்த திட்டத்தின் சதிகாரர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?

பதில்:- எனக்கு தெரிய வில்லை. ஆனால் படம் பிடித்தது நான்தான் என்று லெனினே சொல்லியுள்ளார். அவரை எனக்கு நன்கு தெரியும். பெங்களூர் ஆசிரமத்தில் எனது பக்தர்களில் ஒருவராக அவரும் இருந்து வந்தார்.

சதி திட்டத்தில் அவர் பங்கு என்ன என்று எனக்குத் தெரியவில்லை. முழு உண்மையும் தெரியாமல் லெனின் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க நான் விரும்பவில்லை. அவர் செய்தது போல, திருப்பிச் செய்ய நான் விரும்பவில்லை.

எனக்கு யார் மீதும், எந்த வித கோபமும் இல்லை. ரத்தத்தால் ரத்தத்தை கழுவ முடியாது என்பதை நான் நம்புகிறேன்.

கேள்வி:- உங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- தியான பீடம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்யும்.

கேள்வி:- இங்கிருந்து எங்கு செல்வீர்கள்?

பதில்:- கும்பமேளா பணி முடிந்ததும் ஆசிரமம்தான் செல்வேன். தொடர்ந்து எனது ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவேன். தியான பீட சொற்பொழிவுகளில் கலந்து கொள்வேன்.

கேள்வி:- இங்கு (அரித்து வார்) ஏன் நீங்கள் ரகசிய இடத்தில் தங்கி இருக்கிறீர்கள்?

பதில்:- நான் இங்கு பதுங்கி இருக்கவில்லை. மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறேன். என்னைத் தேடி வரும் பக்தர்களிடம் பேசுகிறேன். பத்திரிக்கையாளர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதானே இருக்கிறேன்.

அரித்துவாருக்கு நான் கும்ப மேளாவில் பங்கேற்கவே வந்துள்ளேன். மேளா முடிந்ததும் நான் பெங்களூர் ஆசிரமம் செல்வேன். நான் செய்து வரும் மனிதநேய சேவைப் பணிகளை தொடர்ந்து செய்வேன்.

கேள்வி:- உங்கள் பக்தர்கள் இன்னமும் உங்களை நம்புகிறார்களா? உங்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்களா?

பதில்:- எனக்கு எதிரான சதி திட்டங்கள் வெளியானதும் ஏராளமான அன்பர்கள், பக்தர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக தியான பீடம் சார்பில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம். அதில் 90 சதவீதம் பக்தர்கள் தொடர்ந்து என் பக்தர்களாக, என்னை ஆதரிப்பவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கேள்வி:- ஆனால் உங்கள் ஆசிரமங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதே?

பதில்:- எங்கள் தியான பீட ஆசிரமங்களை சிலர் மட்டுமே தாக்கினார்கள். நாளடைவில் அது குறைந்து விட்டது. உண்மையான எனது பக்தர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என் பின்னால் உறுதியாக நிற்கிறார்கள்.

கேள்வி:- படுக்கை அறை காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானதால் உங்கள் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளதே?

பதில்:- இணையத் தளங்கள் மூலம் ஏராளமானவர்கள் என்னை ஒரு ஆன்மீக குருவாக ஏற்றிருந்தனர். என்னைப் பற்றிய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பான பிறகும், அந்த சதி திட்டம் பற்றி அறிந்து கொள்ள ஏராளமானவர்கள் இணையத் தளத்தில் பார்த்து வருகிறார்கள்.

எனது 33 வருட ஆன்மீக வாழ்க்கையில் நான் எல்லா வற்றையும் பார்த்து விட்டேன். புகழின் உச்சிக்கு சென்று வந்து விட்டேன்.

என்னை பற்றிய வதந்திகளை சற்று அதிகமாகவே பரப்பி விட்டனர். அந்த செய்தியை காட்டும் முன்பு என்னிடமும் பதில் பெற்றிருக்கலாம். என் தரப்பு தகவல், உரிய பதில் இல்லாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர்.

சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை செய்திருப்பவர்கள், தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் வழி வகை செய்திருக்க வேண்டும்.

என்னை எல்லாரும் சாமியார் என்ற ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். நான் ஆய்வாள னும் கூட. அது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட புத்த கங்கள் எழுதி உள்ளேன்.

எனவே என்னைப் பற்றிய தகவல்களை வெளியிடும் முன்பு, என்னிடம் கேட்டு உறுதி செய்து இருக்கலாம். அதை விடுத்து எனது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டு என் அந்தரங்கத் துக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது எந்த வகையில் நியாயம்...?

கேள்வி:- வீடியோ காட்சிகள் தவிர வேறு சில குற்றச்சாட்டுக்களும் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதே?

பதில்:- அவை எல்லாமே பொய்.

கேள்வி:- உங்களை இப்படி பல கோணங்களில் அழிக்க முயல்வது யார்?

பதில்:- தெரியவில்லை. என் படுக்கை அறையை படம் பிடித்த சதிகார கும்பல்தான் என் மீது பொய் குற்றச்சாட்டுக்களையும் பரப்பி வரலாம் என்று சந்தேகிக்கிறேன்.

கேள்வி:- நீங்கள் எங்கு படித்தீர்கள்? எப்போது ஆன்மீக வழியை தேர்வு செய்தீர்கள்?

பதில்:- எனக்கு இப்போது 33 வயது ஆகிறது. மிக சிறிய வயதிலேயே நான் ஆன்மீகத்துக்கு வந்து விட்டேன்.

எனது ஆன்மீகத் தேடல்கள், படிப்புகள், பயிற்சிகள் மூலம் நான் ஆன்மீக சாதனையை எட்ட முடிந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் இந்த ஆன்மீக பாதைக்கு வந்தேன். அதற்கு முன்பு நான் வேலூரில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்தேன்.

கேள்வி:- வீடியோ காட்சிகள் ஒளிபரப்பான பிறகு கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் இருந்து உங்களை யாராவது அணுகினார்களா?

பதில்:- இல்லை. யாரும் என்னை அணுகி எதுவும் கேட்கவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

நான் இருப்பது போன்ற வீடியோ காட்சிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. சில காட்சிகளை திருத்தி தில்லு முல்லு செய்து இருக்கிறார்கள். அந்த ஒட்டு வேலை தெரியாதபடி நன்கு எடிட்டிங் செய்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சிகளை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் உள்ள தில்லு முல்லு வேலை தெரியும். குறிப்பாக என் அருகில் பெண் இருக்கும் காட்சி களைப் பார்த்தால் அந்த தில்லுமுல்லு புரியும்.

கேள்வி:- அந்த வீடியோ காட்சிகள் எப்போது படம் பிடிக்கப்பட்டது?

பதில்:- டிசம்பர் மாதம் அந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

கேள்வி:- டிசம்பர் மாதம் உண்மையில் என்ன நடந்தது?

பதில்:- டிசம்பர் மாதத்தில் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வு பெற்று வந்தேன். எனக்கு பல்வேறு பக்தர்கள் பணிவிடைகள் செய்தனர்.

உடல் நலக்குறைவாக இருந்த நாட்களில் நான் சுயநினைவே இல்லாமல் தான் இருந்தேன் என்பதே உண்மை.

இவ்வாறு நித்யானந்தா சாமிகள் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக