15 மார்ச், 2010

பொன்சேகா விடுதலையாவது எளிதல்ல': அனோமா




இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா விடுதலையாவது எளிதாக நடக்கும் காரியமல்ல என்று அவரது மனைவி அனோமா தெரிவித்தார்.

ராணுவ சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்றுதான் பொன்சேகா விரும்புகிறார்.​ ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்று அனோமா கூறினார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் நல்லெண்ணம் கொண்டோரும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.​ இது மனதுக்கு ஆறுதலாகவும் திருப்தியாகவும் உள்ளது.​ ஆனால் இந்த வேண்டுகோளுக்கெல்லாம் இந்த அரசு செவிசாய்க்காது என்பது தெரியும்.​ அவர் விடுதலையாக வேண்டுமானால் சட்ட ரீதியாக மட்டுமே சாத்தியமாகும்.​ நீதித்துறை மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார் அவர்.

பொன்சேகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி,​​ ஆள்கொணர்வு மனு ​(ஹேபியஸ் கார்பஸ்)​ தாக்கல் செய்துள்ளார் மனைவி அனோமா.

'பொன்சேகா ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.​ எனவே அவரை ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாது.​ சிவில் சட்டத்தின் கீழ் அவரை விசாரிக்க வேண்டும்'என்று மனுவில் கோரியுள்ளார்.

'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிக் கொடி நாட்டியவர்.​ அவர் சிறந்த ராணுவ தளபதி என்று பாதுகாப்புச் செயலரே பாராட்டி உள்ளார்'என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா ஜேவிபி கட்சியின் தலைமையில் உள்ள ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

அவருக்காக அவரது மனைவி அனோமா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

ஆயுதக் கடத்தல் தொடர்பாக பொன்சேகா மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பொன்சேகா மனைவி அனோமாவிடம் கேட்டபோது உண்மைக்கு மாறாவை.​ உண்மை விரைவில் வெளியாகும் என்று அவர் கூறினார்.​ மருமகன் தனுனா திலகரத்னே எங்கிருக்கிறார் என்ற விவரம் தற்போது இல்லை.​ அவரைப் பற்றி தனக்கு ஏதும் தெரியாது.​ அப்படி தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன் என்று அனோமா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக