23 டிசம்பர், 2010

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியில் இரு அநாமதேய உரக் கப்பல்கள் உடன் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு


கொழும்பு துறைமுகத்துக்கு வெளியில் இரண்டு உரக்கப்பல்கள் அநாமதேயமாக வந்திருப்பது குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கமநல சேவைகள் மற்றும் வனஜீவிகள் அமைச்சர் எஸ். எம். சந்திர சேனவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வத்தளை ஹுனுப்பிட்டியில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட லங்கா உரக்கம்பனியில் புதிதாக அறிமுகப்படுத்திய வீட்டுத்தோட்ட பயிர்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சிறிய உர பக்கற்றுக்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இலங்கை ஒரு விவசாய நாடு. விவசாயத்தின் மூலம் நாட்டில் தன்னிறைவை ஏற்படுத்த முடியும்.

இலங்கையில் பல்லாண்டு காலமாக இரசாயன பசளைகளையே பயன்படுத்தி வருகின்றனர். சேதனப் பசளைகளை பயன்படுத்துவது மிகவும் குறைவு. இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் காணப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி கொம்போஸ் உரங்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

மஹிந்த சிந்தனை 2 ஆம் பாகத்தின் மூலம் இந்த ஆறு ஆண்டு காலத்திற்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு முன் உள்ள சவால்களை முழுமையாக வெற்றி பெறுவதற்கு பல தீய சக்திகள் பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் வெளிப்பாடே கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு உரக் கப்பல்கள் வந்துள்ளன. எமக்கும், அமைச்சுக்கும், இதில் எவ்வித உடன்பாடும் இல்லை. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் நாம் இதற்கு சகல வழிகளிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்நிகழ்வில் அமைச்சர் சந்தைக்கு உர வகைகளை அறிமுகம் செய்து வைத்தார். நகரத்தில் உள்ள மக்கள் சிறு தோட்டங்களை செய்வதற்கும், சிறு பயிர்களை வளர்க்கும் நோக்கில் இந்த உர வகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நகரத்தில் உள்ள மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் மரக்கறிகள், பழங்களை வீட்டின் முற்றத்தில் நடுகை செய்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.

இவர்களுக்கு பெரியளவில் உரத்திற்கு முதலீடு செய்ய முடியாது. இதன் காரணமாகவே நாம் இத்தகைய உரங்களை அறிமுகம் செய்துள்ளோம். 500 கிராம் பைக்கற் சந்தையில் 70 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு வீட்டு முற்றத்தை அலங்கரிப்பதற்காக பூக்களை வளர்க்கும் வீடுகளுக்கும் சிறியளவிலான பைக்கற் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக