2 டிசம்பர், 2010

இயல்பு வாழ்வை குழப்ப வெளிநாடுகளில் மீண்டும் சதி செனல் - 4 வீடியோவுக்கு அரசு கண்டனம்; மறுப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கு எதிரான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்தவும், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் உதவுவதற்குப் பதிலாக இந்தச் சக்திகள் மீண்டும் பிரிவினைவாத சித்தாந்தத்திற்குப் புத்துயிரளித்து வருவதாக அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ காட்சியைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கைத் தூதரகம் அதில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் கிடையாதென சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான ஓர் ஒளிப்பதிவை கடந்த வருடம் செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.

அதன் தொழில்நுட்ப நிலையைப் பரிசீலித்தால் முன்னைய வீடியோவிற்கும் தற்போதைய ஒளிபரப்பிற்கும் எந்த மாற்றமும் கிடையாதெனத் தெரிய வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. இவை இரண்டுமே போலியானவை. திரித்துக் கூறப்பட்டுள்ளவை என்றும் பொதுவாகவே இவ்வாறான முறையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும், இலங்கை அரசு ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகையை நீடிப்பதற்காக விண்ணப்பித்தி ருந்த காலகட்டத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் எனக் குறிப்பிட்டு சில தரப்பினர் புகைப்படங்களைப் பிரசுரித்தி ருந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கடந்த ஒக்டோபர் மாதம் பிரிட்டன் சென்றிருந்த போது அந்நாட்டின் முன்னணி பத்திரிகையொன்றுக்கு போர்க் குற்றங்கள் புரிந்த காட்சிகள் எனக் கூறப்படும் புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆனால், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாத நிலையிலிருப்பதாக அந்தப் புகைப்படங்களை வழங்கியவர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டனுக்குச் சென்றிருக்கின்றவேளை புதிதாக ஒளிபரப்பு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம், புலிகளின் தோல்வியானது முழு நாட்டிலும் ஜனநாயக சுதந்திரத்தை வியாபிக்கச் செய்துள்ளது.

மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த கால சம்பவங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை அடையாளங் கண்டு, மீண்டும் முரண்பாடு ஏற்படாதிருப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் எட்டுப்பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்ட இந்தக் குழு, இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது’ என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் துரிதமாக நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இவ்வாறான போலியானதும் தவறானதுமான பிரசாரத்தை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் செயலாகுமென்றும் அரசாங்கம் கண்டித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக