25 டிசம்பர், 2010

நாடெங்கும் பரவலாக மழை: மலையகப் பகுதிகளில் மண்சரிவு: நிரம்பி வழியும் நிலையில் 21 குளங்கள்


மன்னம்பிட்டியில் வாழ்வோருக்கு அறிவுறுத்தல்
நாட்டில் பரவலாகப் பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பிரதான குளங்களும் நிரம்பி வழியும் கட்டத்தையும் அடைந்துள்ளன.

நாட்டிலுள்ள 21 பிரதான குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாகவும், மூன்று குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வாகன போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதேநேரம் ரன்டம்பே நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை

அடைந்துள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன. இது குறித்து பொலன்னறுவை மாவட்டத்தில் சோமாவதி சயித்திய மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அறிவூட்டப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

தற்போது வட கீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி மழைக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் மலையகத்தின் கிழக்கு பிரதேசங்களில் வாழ்பவர்கள் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்து மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் சமந்த போகாபிட்டிய கேட்டுக்கொண்டார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன மேலும் கூறுகையில், நாட்டில் 59 பிரதான குளங்கள் உள்ளன. அவற்றில் 21 குளங்கள் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்துள்ளன.

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகளும், குருநாகல், இம்புல்வான குளத்தின் மூன்று வான் கதவுகளும், ஹம்பாந்தோட்டை மெளஆர குளத்தின் இரு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகள் யாவும் ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் எச். ஆர். கே.பி. ஹேரத் கூறுகையில், தொடர் மழை காரணமாக கண்டி மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக பெல்வத்தை கிராமசேவகர் பிரிவில் ஐந்து குடும்பங்களும் பைரவகந்த, சைமன்வத்தையில் நான்கு குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அருப்பொல கிராமசேவகர் பிரிவிலுள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினமிரவு மண்மேடு விழுந்ததால் வீடு சேதமடைந்துள்ளது. அங்கு வாழ்ந்து வந்த குடும்பமும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகிய்யாவ கிராமசேவகர் பிரிவிலுள்ள வீடொன்றின் மீது பலாமரமும், வாகை மரமும் சரிந்து விழுந்ததால் அவ்வீடும் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வாழ்ந்த குடும்பமும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதேநேரம் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறுகையில், வலப்பனை நில்தண்டகின்ன வீதியிலும், நுவரெலியா- உடப்புசலாவ வீதியிலும் நேற்று முன்தினமிரவு மண்சரிவு ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான வாகனப் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன. இப்பாதைகளில் விழுந்திருந்த மண்மேடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டன என்றார்.

மலையகத்தில்

மலையகத்தில் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு பொது இடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதன் இரவு தொடக்கம் வியாழன் நேற்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் மகாவலி நதி நிரம்பியுள்ளது. தோட்ட பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, தக்காளி மரக்கறி பயிர் செய்கை நீர் நிறைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு கிறிஸ்மஸ் பண்டிகை வியாபாரமும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விக்டோரியா, ரந்தெனிகல நீர்த்தேக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மயிலப்பிட்டி, ஹங்குராங்கெத்த, ஆரகம, தெல்தெனிய, வேரஹெர, மெதமகநுவர, முறுகாமல, போப்பிட்டிய, தலாத்துஓய, மொரகொல்ல, குருதெனிய பகுதிகளில் மரக்கறி தோட் டங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி, கம்பளை

கடந்த சில நாட்களாக நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் காரணமாக இப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதோடு பல வீடுகளும் சேதத்திற்குள்ளாகின. இதிலிருந்து பழைய நிலைக்கு வருவதற்கு முன் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து மழை பெய்தால் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகளும் பாதிப்படையலாமென பலர் கூறுகின்றனர்.

இம்மழை காரணமாக அன்றாடம் நாட் கூலியை நம்பி வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாட் கூலிக்கு வேலை செய்து வாழும் நடுத்தரத்தினரே அதிகமாக இப்பகுதிகளில் இருக்கின்றனர். மழையினால் வயல்களும், காய்கறி தோட்டங்களும் நீரில் மூழ்கியுள்ளதினால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதோடு, மரக்கறிகளின் விலைகளும், உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக