25 டிசம்பர், 2010

புதியபதையின் நத்தார் வாழ்த்துக்கள்







தேவகுமாரன் ஜேசு கிறிஸ்து இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைபெறச் செய்வார்சமாதானத் தூதுவர் ஜேசு கிறிஸ்து, இவ்வுலகில் மனிதனாக புனித மரியாள் என்ற மானிடகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, மக்களின் பாவத்தை தானே ஏற்றுக்கொண்டு, அதற்காக தனது புனித இரத்தத்தை சிந்திய வரலாற்றின் ஆரம்ப தினமான புனித நத்தார் பண்டிகை இலங்கை உட்பட உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிர்றது.

சுமார் 100 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மேற்கு நாடுகளின் என்றுமே இல்லாதவாறு படுபயங்கரமான பனிமழை பொழிந்து, அந்நாடுகளை பனிமேடுகளாக இந்தத் தடவை மாற்றியிருக்கின்ற காரணத்தினால் இந்த நத்தார் மேற்கு நாடுகளில் அந்தளவுக்கு மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு அங்குள்ள மக்களுக்கு இயற்கை அன்னை அனுக்கிரகம் புரியவில்லை என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக மேற்கு உலகிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் மாரி காலத்திலேயே பனிமழையின் தூறல்களுடன் நத்தார் பண்டிகை மகிழ்ச்சியாகக் கொண் டாப்படுவதுண்டு. இப்போது, மனி தர்களாகிய நாம் சுற்றாடலுக்கு ஏற்படுத்திய

பாதகமான விளைவுகளின் காரணமாகவே, காலநிலை எங்களுக்கு இப்போது பாதகமாக அமைந்துள்ளது.

இந்தப் புனித நத்தார் தினத்திலாவது உலகின் மாந்தர்கள் நாம் மரங்களை வெட்டியோ, ஓசோன் படலத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய வாயுக்களை வெளியேற்றியோ, சுற்றாடலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த மாட்டோம் என்ற பிரதிக்ஞையை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இவ்விதம் சுற்றாடலின் பாதுகாப்பிற்கு மனித குறுத்தைச்சேர்ந்த நாம் முக்கியத்துவம் அளித்தால் நிச்சயம் அடுத்தடுத்த ஆண்டில் வரும் நத்தார் பண்டிகை இந்த நத்தார் பண்டிகையை விட எல்லா கிறிஸ்தவர்களின் மனங்களிலும் மகிழ்ச்சி பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் நாம் திடமாக நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

இந்த நத்தார் பண்டிகை, இலங்கைக்கு இந்தத்தடவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் அதி மேற்றாணியராக விளங்கிய ஆண்டகை அதி உயர் மல்க்கம் ரஞ்சித், அவர்களை, புனித பாப்பரசர் கடந்து நவம்பர் மாதத்தில், பாப்பரசர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள அதி உயர் திருபீடமான கருதினால் பதவிக்கு திருநிலைப்படுத்தி இருப்பது இலங்கைக்கு மட்டுமல்ல, ஆசிய நாடுகளுக்கே கிடைத்த ஒரு பெரும்பாக்கியமாகும்.

நாங்கள் முன்பு குறிப்பிட்டதற்கு அமைய இருளில் வாழ்வோருக்கு ஒளி தரும் நத்தார் பண்டிகை இலங்கையிலும் இந்த தடவை காலநிலையின் சீற்றம் காரணமாக, ஓரளவுக்கு தனது சிறப்பை இழந்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

வடகீழ் பருவபெயர்ச்சி மழைவீழ்ச்சி பருவகாலம் ஆரம்பித்திருப்பதனால், நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இப்போது பெருமழையும் பெருவெள்ளமும் மக்களின் சகஜ வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும் சமாதானத்தின் தேவன் ஜேசு கிறிஸ்துவின் கடைக்கண் பார்வை எங்கள் நாட்டு மக்கள் மீது இப்போது விழுந்து இருப்பதனால், காலநிலையிலும் சாதகமான மாற்றம் ஏற்பட்டு மக்கள் இந்த தடவையும் மகிழ்ச்சியாக தங்கள் நந்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

சில எதிர்க்கட்சிகளும், சமூக விரோதிகள் சிலரும் நாட்டில் செயற்கை யான பொருட்களின் விலையேற்றத்தையும் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களைக் கொண்டுவருவற்கு எத்தணித்த முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது வெற்றிகரமான முறையில் முறியடித்து மக்களுக்கு பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு உதவும் வகையில் பொருட்களைத் தட்டுப்பாடின்றி நியாயவிலைக்கு பெற்றுக்கொடுப்பதில் சாதனை ஏற்படுத்தி இருக்கிறார்.

பண்டிகைக் காலத்தில் ஆடைகள், விளையாட்டு பொருட்கள் உட்பட சகல வித பொருட்களையும் நியாய விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் இப்போது புறக்கோட்டை மெயின் வீதியை முற்றாக மூடிவிட்டு, அங்கு அங்காடி வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது. அதேபோன்று நாட்டின் சகல பிரதான நகரங்களிலும் இத்தகைய வசதிகள் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணுலகின் வேந்தன் மண்ணில் மனிதனாக பிறந்து மக்களின் பாவங்களை போக்கிய இந்த நத்தார் நன்நாளில் இலங்கையில் இன்று தோன்றியிருக்கும் சமாதானமும் அமைதியும் மக்களிடையில் இருந்து வரும் நல்லிணக்கப்பாடும், ஒற்றுமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுவடையச் செய்வதற்கு தேவகுமாரன் ஜேசுகிறிஸ்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் தினகரன் வாசகர்களுக்கு நத்தார் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக