கொழும்பு : இலங்கை அரசு போரினால் பாதிக்கப்பட்ட, தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கு உதவுவதற்காக, அமெரிக்கா சார்பில் ஐந்து ஆம்புலன்ஸ்களை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று, இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பாட்ரிசியா புட்டெனிஸ் கூறியதாவது: போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியேற்றம் செய்து வரும் இலங்கை அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். மறு குடியேற்றத்துக்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணி மிகவும் அவசியம். இலங்கை ராணுவம் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புகள் இரண்டும் இணைந்து இன்று, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளன. இருப்பினும் மேலும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. கண்ணிவெடி அகற்றும் பணி விரைவில் முடிவடைவதற்காக, அமெரிக்கா தொடர்ந்து உதவியளிக்கும். இவ்வாறு புட்டெனிஸ் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக, இலங்கை ராணுவம் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புகளுக்கு அமெரிக்க அரசு, 48 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
இலங்கையில் ஆடை கட்டுப்பாடு: "இலங்கையில் உள்ள கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், அந்தந்த கலாசாரங்களை மதிக்கும் வண்ணம் ஆடை அணிய வேண்டும்' என்ற விதிமுறையை விரைவில் இலங்கை அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்காக, இலங்கை கலாசார மற்றும் கலை அமைச்சகம், ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த விதிமுறைகள் அடுத்தாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக