25 டிசம்பர், 2010

கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்தளிக்கும் உண்மை நத்தாரை கொண்டாடுவோம்


“வெறுமனே அலங்காரம் மட்டும் கொண்ட நத்தாருக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் அன்பைச் சகலருக்கும் பகிர்ந்தளிக்கும் உண்மையான நத்தாரைக் கொண்டாடி மகிழ்வோம்" இவ்வாறு பிரதமர் தி.மு. ஜயரட்ன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்து 2010 வருடங்களின் பின்னர் உதயமாகும் இந்த அழகான நத்தார் இலங்கைவாழ் கிறிஸ்தவ பக்தர்களுக்கு மிக விசேடமான நத்தாராக அமையும் என்பது எனது பூரண நம்பிக்கையாகும்.

தெற்காசிய பிராந்தியத்திற்கான அதி உத்தம கர்தினல் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது இலங்கை வாழ் கிறிஸ்தவ பக்தர்களுக்கும் பொதுவாக இலங்கைத் தாய் நாட்டிற்கும் கெளரவம் அளிக்கும் வகையில் வணக்கத்துக்குரிய அருட்தந்தை மல்கம் ரஞ்சித் அவர்களை கர்தினல் பதவிக்கு உயர்த்தியமையானது எமக்குக் கிடைத்த மிக விசேட நத்தார் பரிசாக நான் கருதுகின்றேன். கடவுளை வழிபடும் புனித தேவாலயத்தில்கூட எக்கணப்பொழுதிலும் பிரபாகரனின் மரண அழைப்பாணை எழுதப்படுமோ என்ற அச்சத்தில் திறந்த மனதுடன் நத்தாரைக் கொண்டாட முடியாத நிலையில் நாம் கழித்த நத்தார் தினங்கள் தான் எத்தனை? நத்தார் மாபெரும் தேவ பூஜையில் கலந்துகொள்ள வோ, தேவாலயத்திற்கு வரவோ முடியாமல் மரண பயத்தில் இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கழித்த நத்தார் தினங்கள் தான் எத்தனை? 30 வருட அர்த்தமற்ற யுத்தமானது எங்களிடமிருந்து பறித்துக்கொண்ட அந்த அன்பு நிறைந்த நத்தாரை இன, மத, குல பேதமின்றி அர்த்தமுள்ள வகையில் கொண்டாடக்கூடிய சூழல் தற்போது நிலவுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான முப்படைகளின் யுத்த வீரர்கள் தமது இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி இந்நாட்டை ஒன்றிணைக்காவிட்டால் இன்னும் நாம் அரைவாசி உயிர்போன மனிதர்களாகத்தான் வாழ நேர்ந்திருக்கும்.

அதனால் இம்முறை நத்தார் தின தேவ பூஜையின்போது அவர்களுக்காக சிறிது நேரம் பிரார்த்தனை புரியுங்கள்!

“ஏழைகளின் உள்ளத்திலேயே கடவுள் வாழ்கின்றார்" என்ற தேவ வாக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக வசதிகளற்ற மாட்டுத்தொழுவம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த தன் மூலம் கிறிஸ்தவ சமயம் எங்களுக்குக் கற்றுத்தந்த ஆழமான படிப்பினையைத் தமது வாழ்வில் பிணைத்துக் கொள்ள தகுந்த தினம் இன்று உதயமாகியுள்ளது.

வெறுமனே அலங்காரம் மட்டும் கொண்ட நத்தாருக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் அன்பினைச் சகலருக்கிடை யிலும் பகிர்ந்தளிக்கும் உண்மையான நத்தாரைக் கொண்டாடி மகிழ்வோம். சாந்தி, சமாதானம் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக