3 அக்டோபர், 2010

நண்பர்கள் யார் என்பதை இனங்கண்டு செயற்பட்டால் தீர்வு சாத்தியமாகும்

அரசியல் தீர்வு முயற்சியைக் கணிசமான சிங்கள மக்கள் பிரிவினை முயற்சியாகச் சந்தேகிக்கின்ற நிலையில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான மார்க்கம் என்ன?தமிழ் மக்களுக்கு இன்று அவசியமாகத் தேவைப்படுவது அரசியல் தீர்வா அல்லது அபிவிருத்தியா என்ற கேள்வி எழுகின்றது. சிலர் அரசியல் தீர்வு என்கின்றனர். வேறு சிலர் அபிவிருத்தி என்கின்றனர். அபிவிருத்தி எனக் கூறும் போது மீள்குடியேற்றமும் உள்ளடங்குகின்றது.

இது கோழி முந்தியதா முட்டை முந்தியதா என்ற கேள்வியைப் போன்றது.

தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கியிருப்பதால் அபிவிருத்தி அவசியமாகத் தேவைப்படுகின்றது. இராணுவ நடவடிக்கை காரணமாக வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்த மக்களை முறைப்படி மீள்குடியேற்ற வேண்டியதும் ஒரு அத்தியாவசியமான தேவை.

இவ்விரு தேவைகள் காரணமாக அரசியல் தீர்வு முயற்சியைக் கைவிடலாமா என்பது அடுத்த கேள்வி.

தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கியதற்கும் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் வீடுவாசல்களை இழந்து இடம் பெயர நேர்ந்ததற்கும் அடிப்படையான காரணம் என்னவென்று பார்த்தால் அரசியல் தீர்வு இல்லாமையே என்ற முடிவுக்கு வரலாம்.

எனவே, அபிவிருத்தி எவ்வளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு அரசியல் தீர்வும் அவசியம். மக்களின் பிரதிநிதிகள் என்று உரிமை கோருபவர்கள் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் செயலீடுபாட்டுடன் பங்கேற்கின்ற அதேவேளை அரசியல் தீர்வு முயற்சியையும் சிரத்தையுடன் முன்னெடுக்க வேண்டும்.

இந்த முயற்சி சரியான முறையில் முன்னெடுக்கப்படாத காரணத்தால் அரசியல் தீர்வு சாத்தியமில்லாது போனது மாத்திரமன்றித் தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கும் உள்ளாகினர் என்பதை இப்பத்தி பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக் கின்றது. எனவே அதுபற்றி இப்போது அதிகம் கூற வேண்டிய தில்லை.

இனப்பிரச்சினை தொடர்பான இன்றைய நிலை திருப்தி தருவதாக இல்லை. நியாயமான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலை இன்று தென்னிலங்கையில் இல்லை. பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் நியாயமான தீர்வல்ல என்பதில் தமிழ் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் இத்திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமற்ற சூழ்நிலையே இன்று தென்னிலங்கை யில் நிலவுகின்றது.

இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை தாங்கியவர்கள் தூரநோக்குடனும் சிந்தனைத் தெளிவுடனும் இத்திருத்தத் தைக் கையாண்டிருந்தால் இக் காலப்பகுதியில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கவும் முடிந்திருக்கும். விட்ட தவறைப் பற்றிப் பேசிக் காலத்தைக் கடத்தாமல் இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற சிந்தனையே இன்றைய தேவை.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கையைக் கணிசமான சிங்கள மக்கள் பிரிவினையின் முதலாவது படியாகச் சந்தேகிக்கின்ற பின்னணி யிலேயே அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். சிங்கள மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்ற இறுமாப்பு மனோபாவம் அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை.

அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்ற நிலையை 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இன்றைய அரசியலமைப்பு தோற்றுவித்திருக் கின்றது. சில திருத்தங்களுக்குச் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் பெற வேண்டியதைக் கட்டாயமாக்கும் ஏற்பாடு இன்றைய அரசியலமைப்பில் உண்டு. அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தங்களும் இந்த ஏற்பாட்டின் செயல் வரம்புக்குள் அடங்குகின்றன.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடியாது என்பது அனுபவ ரீதியாக நிரூபணமாகிவிட்டது. எந்த விதத்திலாவது அரசாங்கத்துடன் உடன்பாடு கண்டு அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தமொன்றை நிறைவேற்றினாலும் கூட, சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் பெறப்படாவிட்டால் அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் சர்வசன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.

எனவே, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் சிங்கள மக்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்கின்றது.

அரசியல் தீர்வு முயற்சியைக் கணிசமான சிங்கள மக்கள் பிரிவினை முயற்சியாகச் சந்தேகிக்கின்ற நிலையில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான மார்க்கம் என்ன?

தேசிய அணுகுமுறை

தேசிய ரீதியான அணுகுமுறைக்கூடாகவே சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியும். தமிழ் அரசியல் தலைமைகள் இதுவரை தேசிய ரீதியாகச் செயற்படவில்லை. இத்தலைவர்கள் தேசிய ரீதியாக இடைக்கிடை செயற்பட்டதெல்லாம் வர்க்க நலனை முன்னிறுத்துவதாக இருந்ததேயொழிய இனப் பிரச்சினை யின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ்த் தலைமைகளின் தேசிய ரீதியான செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானவையாகவே இருந்தன. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் பார்க்கத் தேசியமயக் கொள்கையை எதிர்ப்பதற்கும் இடதுசாரி எதிர்ப்புக்கும் தமிழ்த் தலைவர்கள் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டதே இதற்கும் காரணம்.

சுதந்திர இலங்கையின் முதலாவது தசாப்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு இருந்தது. பல உள்ளூராட்சி சபைகளுக்கு இடதுசாரிகள் தலைமை வகித்தனர். பாராளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். 1956 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன் கந்தையா வெற்றி பெற்றார். வட்டுக்கோட்டைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வயித்திலிங்கமும் யாழ்ப்பாணத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கார்த்திகேசனும் கணிசமான வாக்குகள் பெற்றனர்.

இலங்கைத் தமிழ் மக்களின் அப்போதைய அரசியல் தலைமை யாழ்ப்பாணத்தையே மையமாகக் கொண்டிருந்தது. அதேவேளை இத்தலைவர்கள் வலதுசாரிகளாகவும் இருந்தனர். இடதுசாரிகளின் செல்வாக்கு வளர்ச்சியடைவதைத் தடுப்பது இத் தலைவர்களின் அன்றைய பிரதான நோக்கமாக இருந்தது. இடதுசாரிகளுக்கு எதிராக இவர்கள் மேற்கொண்ட பிரசாரம் சிங்கள எதிர்ப்புப் பிரசாரமாக வும் வடிவெடுத்தது. இப்பிரசாரத்தினால் போஷிக்கப்பட்டு வளர்ந்த குறுந்தேசிய வாதம் இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தேசிய ரீதியாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை. இதன் பாதகமான விளைவை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

வடக்குக்கும் தெற்குக்குமிடையே கோடு கீறி ஒதுங்கி நிற்பதன் மூலம் அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவனவும் நியாயமான அரசியல் தீர்வுக்குச் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனவுமான அரசியல் கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் தமிழ்க் கட்சிகள் நேச உறவை வளர்த்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் அரசியல் தீர்வின் அவசியம் பற்றியும் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு அரசியல் தீர்வினால் பங்கம் ஏற்படாது என்பது பற்றியும் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த முடியும். அவர்களிடம் தோன்றியுள்ள சந்தேகத்தைத் தீர்ப்பதற்கும் அரசியல் தீர்வுக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் இதைத் தவிர வேறு வழி இல்லை.

கூடா நட்பு

மேலே கூறியது போல, தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே நேச உறவைப் பேணி வந்திருக்கின்றார்கள். இப்போதும் இந்த நிலையையே காண்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவு இனப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் எந்தவொரு நன்மையையும் தரவில்லை. இனிமேல் தரப்போவது மில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகச் சாதக மனோபாவத்துடன் நடந்து கொள்வது போலப் பாவனை செய்வதும் உரிய நேரத்தில் காலை வாரிவிடுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வழமை. அக்கட்சியுடன் நேச உறவு கொண்டுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு இது தெரியாது எனக் கூறுவதற்கில்லை. இனப் பிரச்சிதீக்கு அப்பாற்பட்ட ஒரு பிணைப்பு இத் தலைவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே இருப்பதாலேயே இவர்கள் அக்கட்சியுடன் நிரந்தரமாக உறவு பேணுகின்றார்கள்.

1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழரசுக் கட்சியும் கூட்டாக ஆட்சி அமைத்தன. மாவட்ட சபைகளை அமைப்பதென்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே ஐ.தே.க அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி பங்காளி ஆகியது. ஆனால் சிறிது காலம் சென்றதும், மாவட்ட சபை தருவது சாத்தியமில்லை என்று பிரதமர் டட்லி சேனநாயக கையை விரித்துவிட்டார். அதற்குப் பின்னரும் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவைக் கைவிடவில்லை. அந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்தது. தமிழ்த் தலைவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே இனப் பிரச்சினைக் குப் புறம்பான பிணைப்பொன்று இருக்கின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி அதன் வழமையான பாணியில் செயற்பட்டிருக் கின்றது.

சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கு ஒஸ்லோ அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்த போது தமிழ்த் தலைவர்கள் அது பற்றிப் பெரிதாகப் பேசினார்கள். அக்கட்சியுடன் தாங்கள் கொண்டிருக் கும் நட்பை நியாயப் படுத்துவதற்காக ஒஸ்லோ அறிக்கையைச் சுட்டிக் காட்டினார்கள்.

சமஷ்டி நிலைப்பாட்டைக் கைவிடுவதாக இப்போது திஸ்ஸ அத்தநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்திருக் கின்றார். மாற்றுத் தீர்வுத்திட்டம் எதையும் முன்வைக்காமலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இனப் பிரச்சினைக்கான தீர்வில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறவே அக்கறை இல்லை என்பதே இதன் அர்த்தம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான நட்பு கூடா நட்பு என்பதைத் தமிழ்த் தலைவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ளத் தவறுவார்களேயானால் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வில்லை என்றாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக