14 ஆகஸ்ட், 2010

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் நாளை ஜனாதிபதி பிரதம அதிதி






அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத் திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நாளை காலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை பார்வையிட பொதுமக்களுக்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, சுமார் 2 இலட்சம் பேர் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்ப்பதாக துறைமுக அதிகார சபை கூறியது.

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகள் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 3 கட்டமாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு முதற்கட்டப் பணிகள் நவம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

முதற்கட்டத்தின் போது 3 கப்பல்கள் நிறுத்தக்கூடியவாறு வசதி அளிக்கப்பட உள்ளதோடு, மூன்றாம் கட்ட முடிவில் 33 கப்பல்கள் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவத்தை பார்வையிட வரும் மக்களுக்கு நாளை காலை 4.00 மணி முதல் அங்கு வர அனுமதி வழங்கப்படவுள்ளது. 17 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ள நிலப்பரப்பில்

நீர்நிரப்பப்படும் போது அதில் இறங்கி குதூகலிக்க மக்களுக்கு அவகாசம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுக நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கு கடந்த 10ம் திகதி வரை மக்களுக்கு அவகாசம் வழங்கப் பட்டிருந்தது.

துறைமுக பகுதியில் கட்டம் கட்டமாகவே நீர் நிரப்பப்பட உள்ளதோடு, முழுமையாக நீர் நிறைய ஒரு மாதம் பிடிக்கும் என துறைமுக அதிகார சபை கூறியது.

நவம்பர் மாதத்தில் முதலாவது கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக