14 ஆகஸ்ட், 2010

அகதிகளின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது : கனேடிய தமிழர் பேரவை

கப்பலில் வன்கூவர் வந்தடைந்த தமிழ் அகதிகளின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என கனேடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எம்.வி.சன் சீ என்னும் கப்பலில் 490 இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் கனடாவின் விக்டோரியா நகரத்தை வந்தடைந்துள்ளனர். நகரத்தின் அண்மையிலிருக்கும் கனடிய இராணுவ முகாம் ஒன்றில் அனைவரும் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

உடல்நலப் பரிசோதனையைத் தொடர்ந்து 9 நபர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். வந்தவர்களில் 45 சிறுவர்களும், இரு கர்ப்பிணிகள் உட்பட 90 பெண்களும் உள்ளனர் என உறிதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனடி சோதனைகள் முடிந்தபின் நாளை அனைவரும் வெவ்வேறு தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்களென நம்பப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்களின் தடுப்பு முகாம்களில் அல்லாது தனிப்பட்ட வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வந்திருக்கும் அகதிகளை ஏற்றுக்கொண்டதற்காக கனேடிய அரசுக்கு நன்றி கூறிக்கொள்ளும் அதே வேளை, சர்வதேச மற்றும் கனடிய சட்டங்களுக்குட்பட ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு தகுந்த உரிமைகள் வழங்கப்படவேண்டுமென கனேடியத் தமிழர் பேரவை இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அகதிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அகதிகளாக வந்திருப்போருக்கு உரிய முறையில் உதவ மொழி பெயர்ப்பாளர்கள், சட்ட ஆலோசகர்கள், வைத்தியர்கள், குழந்தைப் பராமரிப்பாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்படடுள்ளார்கள் என கனடியத் தமிழர் பேரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கனேடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினருடனும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்துடனும் பேரவை தொடர்பில் இருந்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக