13 ஆகஸ்ட், 2010

நல்லிணக்கக் குழு விசாரணையில் அரசாங்கத் தலையீடு இல்லை

அமெ. காங்கிரஸின் கோரிக்கையை நிராகரிக்கின்றது அரசாங்கம்
இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கோரியிரு ப்பதை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது. யுத்த சமயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதென பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்த வேண்டும் என 57 காங்கிரஸ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்;

இலங்கையில் ஒரு போதும் போர்க் குற்றம் இடம்பெறவில்லை. ஆனால், யுத்த சமயத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சுயாதீன ஆணைக்குழு முன் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற வகையில் நாம் இந்த விடயம் தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். ஆணைக்குழுவின் விசாரணைகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது.

ஆனால், சில நாடுகள் தெரிவிக்கும் குற்றச் சாட்டுக்களை ஏற்க முடியாது. பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியும் சுதந்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்கள் மீள்குடியேற்றப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளும் பாரிய அபிவிருத்திகளும் அங்கு முன்னெடுக்கப்படுகின்றன. சில வெளிநாடுகள் கூறுவதற்காக உண்மையை மறைக்க முடியாது. இதற்கு முன்னரும் ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் தொடர்பில் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதனை ஏனைய நாடுகளுடன் இணைந்து தோற்கடித்தோம்.

அமெரிக்கா என்ன சொன்னாலும் எமது பொறுப்பை நாம் சரிவர நிறைவேற்று வோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எதிர்காலத்தில் செயற்படுத்தப் படும்.

இதற்கு முன் நியமிக்கப்பட்ட குழுக்களின் சில சிபாரிசுகள் அமுல்படுத்தப்ப ட்டுள்ளன என்றார். இதேவேளை, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக