13 ஆகஸ்ட், 2010

சன்கூ’ கப்பல் கனேடிய கடற்பரப்பை அடைந்தது சர்வதேச நியதிகளின் கீழ் விசாரணை



200 தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் எம்.வி.சன்கூ கப்பல் கனேடிய கடல் பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

200 கடல் மைல் (370 கிலோ மீற்றர்) எல்லை கொண்ட கனடாவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ், கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் என கனே டிய செய்தி நிறுவனமொன்று தெரி வித்துள்ளது.

இக்கப்பலின் தற்போதைய வேகத்தின்படி இன்று வெள்ளி காலை கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட 12 கடல் மைல் (22 கி.மீ) நீர் பரப்பை இக்கப்பல் அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. கப்பலிலுள்ள ஆண்களும் பெண்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

சிறார்கள் இருப்பின் அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் பராமரிப்பில் வைக்கப்படுவார்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கப்பல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டோவ்ஸ், கனேடிய துருப்பினர் இந்த கப்பலை கடந்த இரண்டரை மாதங்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள் யார் என்பதில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இக்கப்பல் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் தெரிவித்த அதிகாரி, அதில் பயணம் செய்த ஒரு பயணி இறந்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தாத தகவலும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை இன்னொரு கப்பலும் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனேடிய அரசாங்கம் அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கப்பலில் வருபவர்களைத் தங்க வைப்பதற்கென கனடா சிறைச்சாலைகள் தயாராக உள்ள நிலையில் விக்டோரியா பொது மருத்துவமனையில் 75 பேரைச் சேர்க்கத்தக்கமாதிரி அது மீளத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதேவேளை முன்னாள் அவசர மருத்துவமனைகளும் இவ்வகதிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன.

தாய்லாந்து கொடியுடனான சன்கூ கப்பல் முன்னர் ஹரின் பனிச் 19 என்ற பெயரில் இருந்தது. 24 சிப்பந்திகளுடன் செயற்படும் சன்கூ கப்பல் வினோத் என்ற முன்னாள் கடற்புலியின் தலைமையில் பயணஞ் செய்வதாக தெரியவருகிறது.

முன்னர் ஆயுதக் கடத்தலுக்கு பயன்பட்டு வந்த இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து கடற்படை ரோந்து படகுகள் கண்ணுற்றதாகவும் அப்போது முதல் அந்த கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் குடியேற்றக்காரர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்லும் முதல் கப்பல் சன்கூ அல்ல 10 மாதங்களுக்கு முன் ஓஸியன் லேடி என்ற கப்பலில் 76 இலங்கை தமிழர்கள் கனடாவுக்கு சென்றிருந்தனர். அந்த 76 பேரின் அகதி அந்தஸ்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சன்கூ மற்றும் ஓஸியன் லேடி ஆகிய கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமானவை என தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர், உலகளாவிய ரீதியில் புலிகள் இயக்கத்தினர் உட்பட 1500 தமிழர்களை கடந்த ஒன்றரை வருட காலத்தில் 36 கப்பல்கள் மூலம் கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடத்திச் சென்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கனடாவை நோக்கிச் செல்ல தாய்லாந்தில் ஆயத்தமாவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல்களில் 500 தமிழ் சட்டவிரோதக் குடியேறிகள் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டவிரோத குடியேறிகளில் தமிஸழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடாவை நோக்கிப் பயணித்து வரும் இலங்கைச் சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்ட கப்பலுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளிக்கும் மரியாதையின் அடிப்படையில் ஏனைய இரண்டு கப்பல்களும் பயணத்தைத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக