13 ஆகஸ்ட், 2010

சீன உதவியுடன் கட்டப்படும் இலங்கை துறைமுகம் ராணுவத்துக்கு பயன்படுத்தப்படாது: ஜி.எல்.பெரீஷ்

இலங்கையில், சீனா உதவியுடன் கட்டப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஷ் தெரிவித்தார்.

ஐந்து நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி ஆகஸ்ட் 19-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த துறைமுகம் வணிகத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ராணுவத்துக்காக பயன்படுத்தப்படாது. துறைமுகம், நெடுஞ்சாலை, பள்ளிகள் மற்றும் மின்உற்பத்தி சார்ந்த திட்டங்களில் சீனா பெருமளவில் உதவி செய்து வருகிறது. அதற்காக சீன அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆண்டுதோறும், கிழக்கு- மேற்கு கடல்மார்க்கத்தில் செல்லும் 70 ஆயிரம் சரக்கு கப்பல்களை கையாள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் முதலீடு குறித்து இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது குறித்து கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா ஒருபோதும் பிரச்னை எழுப்பவில்லை என்று பெரீஷ் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரரும், அந் நாட்டு நாடாளுமன்றத் தலைவருமானசாமல் ராஜபட்சவும் சீனா சென்றுள்ளார். அவர் கூறும்போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பாக முதலில் இந்தியாவைத்தான் அணுகினோம், அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. எனவே சீனாவின் உதவியை நாடினோம் என்றார்.

இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் சீனா துறைமுகங்களை அமைத்து வருகிறது. இதனால், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆசிய பாதுகாப்பு சிறப்பு நிபுணர் மரியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக