13 ஆகஸ்ட், 2010

அரசியல் தீர்வுக்கு அரச தரப்போ புலிகளோ முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை




நாட்டின் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அரச தரப்போ புலிகள் தரப்போ தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்படவில்லை. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் முறையானதொரு நிகழ்ச்சி நிரல் கூட முன் வைக்கப்படவில்லை என்று எமரிச்சஸ் மார்க்கஸ் அமைப்பின் தலைவர் கொப்ரி குணதிலக தெரிவித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் பகிரங்க விசாரணை அமர்வு நேற்று சர்வதேச உறவுகள் மற்றும் கேந்திரோபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றது. அதன்போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பெருந்தொகையான பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள். புலிகளின் இந்தச் செயற்பாடானது அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேசத்திற்கு விடுத்த அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

கடைசி கட்ட யுத்தத்தின் போது அப்பகுதிகளில் இருந்த சிறுபான்மையினர் பெருந்தொகையாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை சர்வதேசம் செய்யவில்லை என்று கூட கூறலாம்.

விடுதலைப் புலிகளுடடான யுத்தத்தின் போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்க்கின்ற போது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை மற்றும் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்து பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக இருந்தது. அக்கால கட்டத்தில் ஓரளவு சுமுகமான ஒரு நிலைமை இருந்ததையும் காண முடிந்தது. இருந்த போதிலும் அந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையினை இரு தரப்பும் பின் தள்ளின.

இவ்வாறு அந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையினை இரு தரப்பும் பின் தள்ளியதன் விளைவாகவே பாரிய இழப்புக்களையும் சஞ்சலங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கை காலத்தில் சிறு சிறு சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்தன. அவ்வாறாக இடம் பெற்று வந்து மீண்டு மாவிலாறில் உச்சக் கட்டத்தை அடையவே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயல் இழந்தது எனலாம்.

இவ்வாறு யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் மாவிலாற்றில் ஆரம்பித்த யுத்தமானது படிப்படியாக உக்கிரமடைய ஆரம்பித்தது. இந்த யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. இருந்தும் அது இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்தன. இவ்வாறாக நடைபெற்ற யுத்தமானது இறுதிக் கட்டத்தை அடைந்த போது பெருந்தொகையான மக்கள் இடம்பெயர ஆரம்பித்தார்கள். அதிலு

ம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அது சர்வதேச மட்டத்தில் ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. மனித உரிமை மீறல்கள் அந்த சமயத்தில் மேலோங்கியிருந்ததாக சர்வதேச சமூகங்கள் கூறி வந்தது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி பொதுமக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எதனையும் அந்த சமூகங்கள் செய்யவில்லை.

இன்று ஏதோ ஒரு வகையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏன் இந்த பிரச்சினை ஆரம்பமானது. அதற்கான பிரதான காரணம் என்ன என்பதனையெல்லாம் ஆராய்ந்து அவ்வாறான ஒரு மோசமான நிலைமை மீண்டும் ஏற்படாமலிருக்க வழி செய்வதே சிறந்ததாகும்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த முடியும். இதில் தொடர்பாடல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதாவது தமிழர்கள் சிங்களத்தையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் எழுத வாசிக்க பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் அது நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக