13 ஆகஸ்ட், 2010

இலங்கைப் போர்க் குற்றம்: யு.எஸ். மனித உரிமை அமைப்பு கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்த குழுவின் விசாரணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நியூயார்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. இலங்கையில் சென்ற ஆண்டு போராளிகளுடன் நடந்த இறுதிக் கட்ட சண்டையின் போது கடைசி 5 மாதங்களில் மட்டும் சுமார் 7 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் சென்ற ஜூன் மாதம் 3 நபர் குழுவை அமைத்தார். அக்குழுவின் விசரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இது குறித்து நியூயார்க்கில் செயல்படும் மனித உரிமை அமைப்பின் சட்ட பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

"இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கையில் ஐ.நா. குழு விசாரணை நடத்தவும் அது அளிக்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக