1 ஆகஸ்ட், 2010

பாகிஸ்தானுக்கு கேமரூன் எச்சரிக்கை:

பிரிட்டிஷ் பயணத்தை ரத்து செய்தார் ஐஎஸ்ஐ தலைவர் பாகிஸ்தானை பிரிட்டிஷ் பிரதமர் கண்டித்ததைத் தொடர்ந்து, தனது பிரிட்டன் பயணத்தை ஐ.எஸ்.ஐ. தலைவர் ஷுஜா பாஷா ரத்து செய்தார்.

÷பெங்களூரில் கடந்த புதன்கிழமை பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், "இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுடனான தொடர்பை பாகிஸ்தான் துண்டித்துக் கொள்ள வேண்டும்' என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

÷அவரது இந்த எச்சரிக்கையால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கோபம் கொண்டது. இதையடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான் மேற்கொள்ளவிருந்த பிரிட்டன் பயணத்தை ஐஎஸ்ஐ தலைவர் ஷுஜா பாஷா ரத்து செய்துள்ளார்.

÷பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு குறித்தே பிரிட்டனில் உயர்நிலை அதிகாரிகளுடன் ஷுஜா பாஷா பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

÷அமெரிக்கா செல்கிறார் ஷுஜா பாஷா: ஐஎஸ்ஐ-க்கும், தலிபான்களுக்கும் உள்ள தொடர்பை ஏற்க முடியாது என பிரிட்டன் போலவே அமெரிக்காவும் அறிவித்துள்ளபோதிலும், விரைவில் தான் மேற்கொள்ள உள்ள அந் நாட்டு விஜயத்தை ஷுஜா பாஷா ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

÷பிரிட்டிஷ் செல்கிறார் ஜர்தாரி: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளபோதிலும், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு பிரிட்டனில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

÷அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் இதை உறுதி செய்தார்.

÷வெளியுறவு அமைச்சகம் வருத்தம்: விக்கிலீக்ஸ் இணையதளத்தின் செய்தியை வைத்து டேவிட் கேமரூன் கருத்து தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது என வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் கூறினார்.

÷ஐஎஸ்ஐ-க்கு எதிராக அபாண்டமாக குற்றம்சாட்டுவதன் மூலம், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் புரிந்துள்ள சாதனைகளை மறைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக