அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் செல்லும் இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்காக கிழக்குத் தீமோரில் மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கும் திட்டத்தை தீமோர் நாடாளுமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. இவ்வாறான மத்திய நிலையமொன்றினை ஸ்தாபிப்பது தொடர்பான அவுஸ்திரேலியாவின் திட்டத்தை நிராகரிக்கும் வகையில் தமது நாடாளுமன்றத்தில் யோசனையொன்றை நிறைவேற்றிக் கொண்டதாக தீமோர் பிரதமர் ஜனானா கும்பாவோ தெரிவித்துள்ளார்.
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேறிகளை கிழக்குத் தீமோரில் ஸ்தாபிக்கப்பட்டுவரும் மத்திய நிலையங்களில் தங்கவைத்து அடையாள பத்திரங்களை பரிசோதிப்பதே அவுஸ்திரேலியாவின் திட்டமாகும். தற்போது அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவில் வைத்தே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேவேளை அவுஸ்திரேலியாவிற்கு அப்பால் சட்டவிரோத குடியேறிகளை பரிசோதனைக்கு உட்படுத்தும் மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கும் யோசனையை பிரதமர் யூலியா கிலாட் முன்வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் கெவின் ரூட் பதவி விலகுவதற்கும் சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினையே காரணமாக இருந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய குடியேறிகளுக்கான மத்திய நிலையமொன்றினை ஸ்தாபிக்கும் யோசனை கிழக்கு தீமோரினால் நிராகரிக்கப்பட்டதானது அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கும் தீர்வுகளை முன்வைப்பதில் பெரும் நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக