13 ஜூலை, 2010

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை தொடர்பில் விரிவாக ஆராய்வு-ரணில் தெரிவிப்பு



மக்களுக்குப் பொருத்தமான அரசியல மைப்பொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக, பாராளுமன்றத்துக்குப் பொறுப்பு கூறும் வகையிலான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட பிரதமர் முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தப் பேச்சுக்களின் போது, ஏனைய எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ஊளதாகவும் அவர் சொன்னார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை கொழும்பு கேம்பிரிட்ஜ் டெரசில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருடனான சந்திப்பில் அரசியலமைப்பு திருத்தம், 17 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

தேர்தல்களைப் பொறுத்தவரையில் பிரதேச சபை, நகரசபை மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதும், விருப்புவாக்கு முறைமையை மாற்றியமைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகத் தெளிவுறுத்தப்பட்டது. அதிலும், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களின் போது, இந்த மாற்றங்களை உடனடியாக அமுல்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. இது தொடர்பில் எமது தரப்பு நிலைப்பாடுகளை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தினோம்.

அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கின்ற அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான பேச்சுக்களின் போது, அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதானால் அது மக்கள் மயமான அரசியல் அமைப்பாக அமையவேண்டும் என்பதையும், அது மக்களின் நலனில் எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையிலும் அமையவேண்டும் என்பதையும் நாம் எடுத்துக் கூறினோம்.

17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, அதனூடாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பது தொடர்பிலும் வலியுறுத்தினோம். இந்த விடயங்கள் சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி, இது தொடர்பில் மீண்டும் பேச்சுக்களை நடத்தி தீர்மானங்களை மேற்கொள்வதென இணக்கம் காணப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்துவோம். இதன்போது, ஜனநாயக தேசியக் கூட்டணியையும் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு ஏற்கனவே அரசாங்கத்துடன் பேச்சு நடத்திவருகின்றது. எனவே, அது குறித்து இங்கு கூறுவதற்கில்லை. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு மக்களின் நலன் கருதியதாகும். எனினும், அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாட்டுகளுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறோம். மக்கள் மீதான விலைவாசிச் சுமை, வரிச் சுமை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பு திருத்தம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக, பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறுகின்ற நிறைவேற்று அதிகார முறைமையினை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக முன்னேற்றகரமான கருத்துக்களை பொது மக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் எந்த சந்தர்ப்பத்திலும் அது மக்களுக்காகவே குரல்கொடுக்கின்ற கட்சியாகும். ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் அதேநேரம் நல்லாட்சியையும் மக்களுக்கான நிவாரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான நோக்கத்திலேயே அது செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளும் நாட்டினதும், மக்களினதும் எதிர்காலம் கருதியதாகவே அமைகின்றது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக