13 ஜூலை, 2010

சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு







ஆப்பிரிக்க நாடான சூடானில் ஒமர் அல்-பஷீர் அதிபராக இருக்கிறார். அங்குள்ள தார்பர் பகுதியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வரு கின்றனர்.

அவர்களின் போராட்டத்தை சூடான் அரசு ராணுவம் மூலம் அடக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த தாக்குதலின்போது போராட்டத்தில் ஈடுபட்ட பர், மசாலித், ஷகாவா ஆகிய இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஒமர் அல்- பஷீர் மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் போர்குற்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிபர் ஒமர் அல்- பஷீருக்கு கடந்த ஆண்டு கைது வாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

மனிதாபிமானத்துக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி இது வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஒமர் அல்-பஷீரின் சார்பில் அவரது வக்கீல் லூயிஸ் மொரேனோ நகாம்போ கடந்த 4 மாதத் துக்கு முன்பு அப்பீல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் அதிபர் ஒமர் அல்-பஷீர் மீது இனப்படுகொலை தொடர்பாக 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்து கீழ் கோர்ட்டு அறிவிப்பை உறுதி செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொன்று குவித்தது, அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு மனரீதியாக வருத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் அடக்குமுறையை பயன்படுத்தியது என்ற 3 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

போர்குற்ற வழக்கு தொடர்பாக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்ட முதல் அதிபர் இவர தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக