ஆர்.எம்.எஸ்., டைட்டானிக் என்ற பிரிட்டிஷ் பதிவு பெற்ற உல்லாசக் கப்பல், கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது, கடலில் மூழ்கியது. இதில் 1500 பயணிகள் இறந்தனர்; 700 பேர் உயிர் தப்பினர். வரலாற்றில் ஒரு சோக முத்திரையை பதித்த இந்த சம்பவம் திரைப்படமாக உருவாகி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பல ஆண்டுகளுக்கு பின், டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடைத்தன. அவை டைட்டானிக் கப்பலின் நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன.
இதேபோல், கடந்த 112 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏரியில் மூழ்கிப்போன ஒரு நீராவிக் கப்பல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, மில்வாகி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 1991ம் ஆண்டு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 300 அடி ஆழத்தில் ஒரு மர்மமான பொருளில் அவர்களின் வலை சிக்கியது. இது, பல ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய ஏதாவது ஒரு கப்பலின் பாகங்களாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, மில்வாகிக்கு தெற்கே 40 மைல் தொலைவில், கடந்த 20 ஆண்டுகளாக மெக்சிகன் ஏரியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஏராளமான ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர். ஆழ்கடலில் ஆய்வு செய்யும் தொழில் நுட்பத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மிகப்பெரிய நீராவிக் கப்பலான எல்.ஆர்.டோடி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சிக்கி நீரில் மூழ்கிய சம்பவம் மீண்டும் வெளி உலகிற்கு தெரியவந்தது.
ஜிட்கா ஹனகோவா தலைமையில் நீரில் மூழ்கும் குழுவிடம் இந்த நீராவிக் கப்பல் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன கப்பல்களில் மிகப்பெரியது இது என இக்குழுவினர் கண்டுபிடித்தனர். மெக்சிகன் ஏரியின் அடியில் களிமண் சேற்றில் கப்பல் செங்குத்தாக சிக்கியிருந்த போதிலும் சேதமடையாமல் இருந்தது. மெக்சிகன் ஏரி நன்னீர் ஏரி என்பதாலும், அதன் அடியில் உள்ள நீர் குளிர்ச்சியாக இருந்ததாலும் டோடி கப்பல் சேதமடையாமல், நல்ல நிலையிலேயே இருந்தது. மேலும், கப்பலின் பாய்லர் ரூமில் இருந்த உடல்களும், அழுகிப் போகாமல் நல்ல நிலையில் இருந்தன. 20 அடி உயரம் உள்ள கப்பலின் உள்ளே, புயலின் போது 30 அடி உயரத்திற்கு அலை எழும்பி பல டன் எடையுள்ள நீர் கப்பலில் கொட்டியதால் கப்பல் மூழ்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட மூழ்கிய கப்பல்களை ஆய்வு செய்த, தொல்பொருள் ஆய்வாளர் பிரன்டான் பெய்லாட் கூறுகையில், "1898ம் ஆண்டு அக்டோபர் மாதம் மெக்சிகன் ஏரியில் தெற்கு சிகாகோவில் இருந்து ஒன்டாரியோவிற்கு மக்காச்சோளம் சரக்குகளை ஏற்றிக் கொண்டு எல்.ஆர்.டோடி நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பயங்கர புயல் காற்று வீசியது. பனியும், ஆலங்கட்டி மழையும் தொடர்ந்து பெய்தன. 30 அடி உயரத்திற்கு அலை தோன்றி கப்பலை தாக்கியது. இதில் 300 அடி நீளமுள்ள நீராவிக் கப்பல் நீரில் மூழ்கியது. அந்த நேரத்தில் இரண்டு பாய்மரக்கப்பல்களை கொண்டு இழுத்து நிறுத்த முயற்சி செய்தும் அது நிறைவேறவில்லை. நீராவிக் கப்பலில் பயணம் செய்த 17 பேரும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.
புயல் காற்று ஏற்படும் போது கப்பலை திசை திருப்ப உதவும் சுக்கான் உடைந்து போனால் கப்பல் தள்ளாடி மூழ்கி விடும். இதனால் கப்பலில் உள்ளவர்கள் இறந்து விடுவர். தற்போது விஸ்கோசின் மாநிலத்திற்கு சொந்தமான எல்.ஆர். டோடி கப்பலை வெளியே எடுக்கும் எண்ணமில்லை. நூறு ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருக்கும் இக்கப்பலை இனியும் நல்ல முறையில் பாதுகாப்பது கடினம். இயற்கையாகவே இன்னும் சில ஆண்டுகளில் கப்பல் சேதமாகிவிடும். மூழ்கிப்போன டோடி நீராவிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், 100 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட எங்களது கலாசார வரலாறு தெரிந்து கொள்ள முடிகிறது' என்கிறார். புயல் காற்று, கப்பலில் ஓட்டை உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் சிக்கி ஆயிரக்கணக்கான கப்பல்கள் பெரிய ஏரிகளில் மூழ்கியுள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் மெக்சிகன் ஏரியில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக