வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல அரச அலுவலகங்களையும் மீள நிர்மாணிப்பதற்கான இரண்டு வருட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென முதற்கட்டமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 89 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் உட்பட யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல அரச நிர்வாகச் கட்டிடங்களும் இதன் மூலம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் 200 மில்லியன் ரூபா செலவிலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் 60 மில்லியன் ரூபா செலவிலும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.
அத்துடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களும் இப்பிரதேசங்களிலுள்ள கிராம சேவையாளர் காரியாலயங்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சகல அரச அலுவலகங்களும் தற்போது செயற்படுகின்றன.
புதுக்குடியிருப்பு மற்றும் மருதங்கேனி போன்ற பிரதேச செயலகங்கள் வேறு இடங்களில் இயங்கி வருவதுடன் ஏனைய சகல அரச அலுவலகங்களும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த செயலகங்களுக்கான தளபாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பல செயலகங்கள் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 175 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் அதில் 152 மில்லியன் ருபா செலவிடப்பட்டு பெரும்பாலான கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து 2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் இரண்டு வருடத்திட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரண்டு வருடங்களில் சகல அரச கட்டிடங்களும் முழுமையாக மீள்நிர்மாணம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக