23 ஜூன், 2010

கனடாவில் ஜி8, ஜி20 மாநாடு: வரலாறு காணாத பாதுகாப்பு


டொரண்டோ, ஜூன் 22: கனடாவில் நடைபெறவுள்ள ஜி8, ஜி20 மாநாடுகளுக்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்த 3 நாள்கள் இந்த மாநாடு ஆன்டாரியோ மற்றும் டொரண்டோ நகரங்களில் நடைபெறவுள்ளது. ஜூன் 25, 26-ம் தேதிகளில் ஹன்ட்ஸ்வில் நகரிலும், ஜூன் 26, 27-ம் தேதிகளில் டொரண்டோ நகரிலும் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி8, ஜி20 மாநாடுகளுக்காக இரு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கனடாவுக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டின்போது அசம்பாவிதச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகளை கனடா அரசு மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநாடு நடைபெறும் வளாகத்தைச் சுற்றி 3 மீட்டர் உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகள் மூலம் டொரண்டோ, ஆன்டாரியோ நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படையில் கனடா ராணுவம், கடற்படை, விமானப் படை அதிகாரிகள், டொரண்டோ போலீஸக்ஷ்ர், ஆன்டாரியோ போலீஸக்ஷ்ர் இடம்பெற்றுள்ளனர்.

கனடாவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக