17 மே, 2010

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் விலாசம் தொலையப் போகின்றது : ஸ்ரீலமுகா

அரசாங்கம் முன்னெடுக்கப் போகும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றங்களால் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் விலாசம் தொலைந்து விடப்போகிறது. எனவே அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது.

அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுக்கவுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் எம்மை பலவீனப்படுத்தி பெரும்பான்மையை பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.

இதனை அரசாங்கத்திற்குள் பதவிகளை வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை வெளியிலுள்ள நாம் புரிந்து கொண்டுள்ளோம். உள்ளே இருப்பவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் தொடர்ந்து அவர்கள் இருப்பார்களானால் அரசியலில் விலாசமே இல்லாமல் போய் விடுவார்கள். அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைமையில் திருத்தங்கள் மூலம் சிறுபான்மை இன தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்

வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டு சிறுபான்மை இன மக்களை அடக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே தமிழ், முஸ்லிம் என்ற ரீதியில் இனியும் நாம் பிரிந்திருக்காது தமிழ்ப் பேசும் மக்களாக ஓரணியில் இணைய வேண்டும். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அது வெற்றி பெற்றுள்ளது.

அதேபோன்று இ.தொ.கா. உட்பட மலையக கட்சிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரசில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.

இவ்வாறு நாங்கள் ஒன்று சேர்ந்து அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை, தனிநாடு கோருகிறார்கள், மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்க முனைகின்றார்கள் என்று அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரத்தை முன்னெடுக்கும்.

அந்தப் பிரசாரத்திற்கு, சிறப்புரிமைகளுக்காக அரசுடன் இணைந்துள்ள எம்மவர்களும் ஒத்து ஊதுவார்கள். அவ்வாறானவர்களும் இறுதியில் விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள்.

நாம் தனி நாடு கோரவில்லை. எமக்குள்ள அரசியல் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்த்தே பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம். தமிழ்ப் பேசும் மக்களாக ஓரணியில் திரள்கிறோம். சொந்த அபிலாஷைகளை தூக்கியெறிவோம்.

இன்று எமது முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் தனிப்பட்டவர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி தம் பக்கம் இணைக்க முயல்கிறது.

ஆனால், எம்மவர்கள் சோரம் போக மாட்டார்கள். சிறுபான்மைக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி நாட்டில் பெரும்பான்மை இனத்தை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் " என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக