17 மே, 2010

தீர்வுத் திட்டமின்றி செனட் சபை அமைக்கப்படுவது அர்த்தமற்றது : ஐதேக

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் தீர்வுத்திட்டம் ஒன்றைக் கொண்டுவராமல் முதலில் செனட் சபையை அமைப்பதில் அர்த்தம் இல்லை. எனவே அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்துடன் செனட் சபையைக் கொண்டுவருவதையே ஐக்கிய தேசிய முன்னணி விரும்புகின்றது என்று முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தங்களின் போது செனட் சபை ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அனைத்து மாகாண சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செனட் சபை அமையும் என்றும் அரசாங்கம் கூறிவருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் செனட் சபை உள்ளிட்ட விடயங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றது. நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களை நாங்கள் எதிர்க்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

முக்கியமாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தீர்வுத்திட்டத்தை முதலில் கொண்டுவராமல் செனட் சபையை அமைப்பது அர்த்தமற்ற விடயம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

அரசியல் தீர்வுத்திட்டத்துடன் செனட் அமைக்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்ளலாம். செனட் சபை என்பது சிறந்த விடயம் என்பதனை நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் அது தீர்வுத்திட்டத்துடன் வரவேண்டிய விடயமாகும்.

அவ்வாறு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லுமாயின் அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று அவசியமாகும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக