நியூயார்க்:குடும்பப் பிரச்னையில் மனம் வெறுத்துப் போன தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 19 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்; பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்தவர் தேவி சில்வியா. இவர் கணவர் டொமினிக் ஜேம்ஸ் பிருத்விராஜ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வர தேவி விரும்பினார். ஆனால், கணவர் தன் வேலை காரணமாக சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க் என எப்போதும் பறந்து கொண்டே இருந்ததால், வீட்டைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை.
இம்மாதிரி தனிமை வாழ்க்கையில் நொந்த அவருக்கு, வழி ஏதும் கிடைக்கவில்லை. தனியே குழந்தைகளுடன் வாழும் போது மனமொடிந்து போன தேவி சில்வியா, அங்குள்ள ஹட்சன் ஆற்றில் தனது 19 மாத கைக்குழந்தையை வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தார். குளிர் நிரம்பி சில்லிட்ட ஆற்றில் விழுந்ததும், குழந்தை நடுங்கி நீல நிறமானது.ஆனால், உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தை அதிக குளிரான நீரில் விழுந்ததால் அதன் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. 'இப்படி நடந்தாலாவது என் குழந்தையை என் கணவரிடம் சேர்க்கமாட்டார்களா என்று தான் செய்தேன்' என்று தேவி கூறியுள்ளார். மன பாதிப்பு சிகிச்சைக்காக தனி மருத்துவமனையில் தேவி இருப்பதால், அங்கிருந்தே வழக்கு விசாரணை நடந்தது.
தற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை பாதியாகக் குறைக்கப்படும். ஆனால், தேவி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரணையில், தேவி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். குழந்தையை தாய் பார்க்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். தேவியின் கணவர் இன்னமும் வந்ததாக தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக