2 மே, 2010

வடக்கில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக்க விசேட செயலணி


7ம் திகதி முதல் நடைமுறை; 16இல் யாழ். நகரில் செயலமர்வு; வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தகவலவட மாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.தன்னால் நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணி, எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (மாகாண பொது நிர்வாக) இராசநாயகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் மாகாண கைத்தொழில் பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர், கூட்டுறவு பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் அடிப்படையில் இந்த செயலணி தமது திட்ட அறிக்கையை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்கவுள்ளதென்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயலணி இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மாவட்ட ரீதியில் கூட்டுறவு கிராமிய அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது என்றார்.

இந்த செயலணி தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக யாழ். மாவட்டத்திலுள்ள கைத்தொழில், கிராமிய மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கென விசேட செயலமர்வு ஒன்றை எதிர்வரும் 16ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தவுள்ளது.

இந்தச் செயலமர்வின் போது மூன்று துறைகளைச் சார்ந்தவர்களுக்குத் தெளிவு படுத்தப்படவுள்ளதுடன் அவர்களது குறைநிறைகளும் கேட்டறியப்படும். மேற்படி மூன்று துறைகளையும் துரிதமாக மேம்படுத்துவதற்கான சில ஆலோசனை களையும் இந்த செயலணி வழங்கவுள்ளது.

இந்த செயலணி, வழங்கும் ஆலோசனை க்கு அமையவும், வேண்டுகோளுக்கமையவும் வட மாகாண சபையின் ஊடாக மேற்படி மூன்று துறைகளின் மேம்பாட்டுக்காக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டானில் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் சில தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் துறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயலணியின் மூலம் செயற் பாடுகள் மேலும் துரிதப்படுத்தப்படவுள்ளதாக வும் ஆளுநர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக